சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்பவர்கள் பலவீனமானவர்கள் என்ற பிம்பம் நம்மில் பலருக்கு உண்டு. அவ்வளவு ஏன், சைவ உணவை உட்கொள்பவர்களில் சிலர் கூட தங்களை பலவீனமானவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையைச் சொல்வதானால் சைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் அசைவம் சாப்பிடுபவர்களைவிடவும் ஆரோக்கியமாகவும் பலசாலிகளாகவும் இருப்பார்கள், இருக்கவும் வேண்டும் இது தான் இயற்கையின் அமைப்பு.
சைவ உணவை மட்டும் உண்பவர்கள் பலவீனமாக உணர்வதற்குக் காரணம் அவர்களின் மனம். சமுதாய ரீதியாகவும், மத ரீதியாகவும், நம்பிக்கை ரீதியாகவும், சினிமா பத்திரிக்கைகள் போன்ற ஊடகங்கள் மூலமாகவும், சைவம் உண்பவர்கள் பலவீனமானவர்களாக உருவகப்படுத்தப் படுகிறார்கள்.
சைவ உணவை பலவீனமாக நினைப்பவர்கள் சற்று சிந்தியுங்கள். நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகவும் பலசாலியான விலங்கு எது? யானை தானே? யானை சைவமா அசைவமா? நிலத்தில் வாழும் விலங்குகளில் ஆற்றல் அதிகமாக உள்ள விலங்கு எது குதிரை தானே? குதிரை சைவமா அசைவமா? மனிதர்களுடன் சேர்ந்து அதிகமாகவும், கடுமையாகவும், உழைக்கும் விலங்கு காளை மாடு? காளை சைவமா அசைவமா? நிலத்தில் வாழும் விலங்குகளில் மிக அதிகப் பலசாலியும், உழைப்பாளியும் சைவ உணவுகளை உண்ணும் விலங்குகள்தான்.