ரெய்கியின் கட்டுப்பாடுகள். இந்த பிரபஞ்சம் எவ்வாறு ஒரு மதத்திற்கோ, இனத்திற்கோ, நம்பிக்கைக்கோ, மொழிக்கோ, நாட்டிற்கோ, உரிமையானது கிடையாதோ; அதைப் போன்று ரெய்கியும் எந்த ஒரு மதத்திற்கும், இனத்திற்கும், நம்பிக்கைக்கும், மொழிக்கும், நாட்டிற்கும், உரிமையானது கிடையாது. ரெய்கி ஒரு சுதந்திரமான பேராற்றல், அதற்கு எந்த எல்லையும், கட்டுப்பாடும் கிடையாது.
உண்மையில் ரெய்கி ஆதிகாலம் தொட்டு மனிதர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த ஆற்றலின் பெயர் ஒவ்வொரு இடத்திலும் மாறுபடுமே ஒழிய, அந்தப் பெயர்கள் உணர்த்தும் அடிப்படை ஆற்றல் ஒன்றுதான். புராண காலம் முதலாக ஆச்சரியமான பல கதைகளையும், நிகழ்வுகளையும், மனிதர்களையும், நாம் கேள்விப்பட்டிருப்போம்.
அவர் தொட்டால் நோய்கள் குணமாகுமாம், ஊமைகள் பேசுவார்களாம், குருடர்களுக்கு பார்வை திரும்புமாம்; அவரைச் சந்தித்தால் துன்பங்கள் தீருமாம்; இவரைச் சந்தித்தால் பிரச்சனைகள் தீருமாம்; அந்த இடத்திற்குச் சென்றால் தீய சக்திகள் ஓடிவிடுமாம்; இவ்வாறு பல காலமாக பலரைப் பற்றிய செய்திகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறான அதிசய ஆற்றல்களைக் கொண்ட மனிதர்கள், பரவலாக எல்லா இடங்களிலும், எல்லா காலகட்டத்திலும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
ஒரு தனிநபர், பலரின் நோய்களைத் தீர்ப்பதற்கும், துன்பங்களை நீக்குவதற்கும், பிரச்சனைகளுக்கு தக்க தீர்வுகளை வழங்குவதற்கும், உறுதுணையாக இருப்பது பிரபஞ்சப் பேராற்றல் தான். இந்த ஆற்றலை முறையாக பயன்படுத்தத் தெரிந்த ஒரு மனிதர், எல்லா மனிதர்களுக்கும் பயன்தரும் வகையில் ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும்.
ரெய்கியிடமிருந்து உதவிகளை பெறுவதற்கு, ரெய்கி எவ்வாறு இயங்குகிறது என்பதைப் புரிந்துக் கொண்டால் போதுமானது. ரெய்கியை பயன்படுத்த எந்தச் சடங்கும், சம்பிரதாயமும், மந்திரமும், சிம்பலும் தேவையில்லை. ஒரு மனிதனுக்கு அறத்துக்கும் தர்மத்துக்கும் உட்பட்ட, நியாயமான தேவைகள் உண்டாகும்போது; தூய உள்ளத்தோடு நினைத்தவுடன், நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைக்கக்கூடியது ரெய்கி ஆற்றல். இந்த ஆற்றலை முறையாக பயன்படுத்தும் போது, இயலாது, முடியாது, கிடையாது, கிடைக்காது, என்று எதுவுமே இருக்காது.