ரெய்கி சின்னத்துக்கு அறிமுகம். ஹோலிஸ்டிக் ரெய்கியில் ரெய்கி சின்னங்கள் இல்லாமலேயே நோய்களைக் குணப்படுத்திக் கொள்ளலாம் மேலும் வாழ்வியல் பிரச்சனைகளுக்குத் தீர்வும் காணலாம். ஆனாலும் ரெய்கியில் பயன்படுத்தப் படும் சின்னங்களைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்வதும் நல்லது தானே.
ரெய்கி சின்னங்கள் என்பவை, மாய மந்திர வித்தைகள் செய்யக்கூடியவை என்றும், செல்வச் செழிப்பை உண்டாக்கக் கூடியவை என்றும், மனித வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளைச் சரிசெய்யக் கூடியவை என்றும் பரவலாக நம்பப்படுகிறது. சிலர் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு சிம்பலைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவார்கள், சிலர் பல சிம்பல்களை மனப்பாடம் செய்துகொண்டும், அச்செடுத்து வைத்துக் கொண்டும் இருப்பார்கள். அவர்கள் வைத்திருக்கும் சிம்பல்கள் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யப் போகின்றன என்றும் நம்புவார்கள்.
ரெய்கி சிம்பல் தெரிந்துவிட்டால் எல்லாம் தெரிந்துவிட்டது என்று எண்ணுவதும், ரெய்கி சிம்பல்களைக் கொண்டு அனைத்தையும் சாதித்துவிடலாம் என்று எண்ணுவதும் வெறும் மூட நம்பிக்கைகள் மட்டுமே. பலர் என்னைத் தொடர்பு கொண்டு தங்களின் தேவைகளைக் கூறி அவற்றைப் பூர்த்தி செய்வதற்கு எந்த சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்பார்கள். சிம்பல் தொடர்புடைய மேலும் பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களைக் கேட்பார்கள். அவர்களும் நான் கூறும் ஒரே பதில், ரெய்கியின் ஆற்றலும் அதன் பலனும், ரெய்கி சிம்பலில் இல்லை, அந்த சிம்பலை வரையும் நபரிடமே உள்ளது.
தொடக்கக் காலத்தில் ரெய்கியின் நிறுவனர் மிக்காவோ உசுய் கூட சிம்பல்களைப் பயன்படுத்தவில்லை. மிக்காவோ உசுய் ரெய்கி சிகிச்சை வழங்கத் தொடங்கிப் பல ஆண்டுகளுக்கு பிறகே ரெய்கி பயிற்சியில் சிம்பல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பெரும்பாலான ரெய்கி சின்னங்கள் புராதன புத்த மதத்தைச் சார்ந்தவை.
ஒரு ரெய்கி மாஸ்டர் தனது தேவைக்காகவும், ரெய்கி ஆற்றலைக் கிரகிக்கவும், ரெய்கி ஆற்றலை அனுப்பவும், ரெய்கி ஆற்றலைத் தேக்கி வைத்துக் கொள்ளவும், சின்னங்களைப் பயன்படுத்துகிறார்கள். முழுமையாக ரெய்கியை புரிந்து கொண்டவர்கள் பல்வேறு சின்னங்களைப் பயன்படுத்தத் தேவையில்லை, தனக்கு விருப்பமான ஏதாவது ஒரு சின்னத்தை முழுமையாக எல்லா தேவைக்காகவும் பயன்படுத்தலாம்.
சிம்பலின் பயன்பாட்டைப் புரிந்துகொள்ள, ஒரு சிற்பத்தை அல்லது ஓவியத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஒரு சிற்பம் அல்லது ஓவியத்தை நாம் பார்க்கிறோம், இரசிக்கிறோம், பயன்படுத்துகிறோம், மேலும் பல்வேறு வகையில் அவற்றுக்கும் மதிப்பும் மரியாதையும் செய்கிறோம். பிடித்திருந்தால் சிலர் அதே போன்ற சிற்பத்தையும் ஓவியத்தையும் புதிதாக உருவாக்குகிறோம்.
இப்போது சற்று சிந்திக்க வேண்டும். சிற்பமாக ஓவியமாக வடிவமைக்கப்பட்ட அவை, எங்கிருந்து உருவாகின? ஒரு மனிதனின் எண்ணத்தில், சிந்தனையில், அல்லது அவர் புரிதலில் உருவாகின. அவற்றை அவர் எழுத்தாகவோ, ஓவியமாகவோ, சிற்பமாகவோ, மற்றவர்களின் பார்வைக்காக வடிவமைக்கிறார். இவ்வாறான தன்மையுடன் உருவானவைதான் ரெய்கி சிம்பல்கள்.
ரெய்கி ஆற்றல் என்பது ரெய்கி மாஸ்டரிடம் இருந்தும், பிரபஞ்சத்திடம் இருந்தும் மட்டுமே உருவாகின்றன. அதனால் ரெய்கியை புரிந்துகொண்ட, அதன் தன்மையை அறிந்துகொண்ட ஒரு நபர் அவருக்குத் தோதான எந்த சிம்பலைப் பயன்படுத்தியும், எந்த வழிமுறையைப் பயன்படுத்தியும், ரெய்கி ஆற்றலைக் கிரகிக்கலாம் அனுப்பலாம்.
Leave feedback about this