ரெய்கி ஆற்றலை சரியான இலக்கை நோக்கிச் செலுத்த. இந்த உலகில் அனைத்துமே ஆற்றல்தான், மனிதர்கள் முதல் தாவரங்கள் வரையில் அனைத்துமே ஆற்றலின் மறு உருவங்கள் தான். அதனால் அனைத்து உயிர்களுக்கும், இயற்கையின் படைப்புகளுக்கும் ஆற்றல் தேவைப்படும். மனிதர்கள் முதல் தாவரங்கள் வரையில் எல்லா உயிர்களுக்கும் நல்ல ஆற்றல் எங்கு இருந்தாலும் அதனைக் கிரகித்துக் கொள்ளும் தன்மை உள்ளது.
ரெய்கி ஆற்றலை அனுப்புபவரும் அதனைப் பெற்றுக் கொள்பவரும் ஒரே சிந்தனையில், ஒரே தன்மையில் இருந்தால் தான் ஆற்றல் பரிமாற்றம் முழுமையாக நடைபெறும். அவ்வாறு இல்லாவிட்டால், அனுப்பும் ஆற்றல் முழுமையாக சென்று சேராமல் பாதி வழியில் கரைந்துவிட அதிக வாய்ப்புகள் உள்ளன. மற்ற உயிர்களும் பொருட்களும் அந்த ஆற்றல்களை ஈர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன.
பிரபஞ்ச ஆற்றலை முறையாகவும் இலகுவாகவும் அதன் இலக்கை நோக்கிச் செலுத்துவதற்கு, குறைந்தது பத்து நிமிடங்கள் தியானம் செய்து, பின்னர் மன ஒற்றுமையுடன் ஆற்றலை அனுப்ப வேண்டும். ரெய்கியை அனுப்புபவரும் அதைப் பெறுபவரும் அமைதியாகவும், சாந்தமாகவும், மன ஓர்மையுடனும் இருத்தல் வேண்டும்.