மனம்

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. மனிதர்கள் எதில், எப்போது மனத் திருப்தி அடைகிறார்கள்? அவர்கள் விரும்பும் பணத்தையோ, செல்வத்தையோ, வசதிகளையோ, இன்பங்களையோ, பூர்த்தி செய்து வைத்தால் திருப்தி அடைவார்களா? அவர்கள் வேண்டுவதை விடவும் அதிகமாகக் கொடுத்தால் திருப்தியடைவார்களா? இல்லை… மனிதர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி ஆவதில்லை. இந்த உலகில் எதைக் கொண்டும் மனித மனம் அமைதி அடைவதில்லை.

உணவை மட்டுமே மனிதர்கள் போதும் என்று சொல்வார்கள். என்னதான் விருப்பம் இருந்தாலும், சுவையாக இருந்தாலும், யாருமே 50 இட்டிலிகளை உண்பதில்லை, 4 தட்டை பிரியாணியை உண்பதில்லை. வயிறு நிறைந்ததும் போதும் என்று ஒதுக்கிவிடுவார்கள். அவர்களின் மனதுக்குள் இன்னும் கொஞ்சம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கலாம், ஆனாலும் உடல் ஒத்துழைக்காது. வயிறு நிறைந்தும் உடல் உணவு உண்பதை நிறுத்தச் சொல்லிப் போராடும்.

எவ்வளவு இருந்தும் திருப்தி அடையாத மனம், தன்னிடம் இருப்பவை போதும் என்று உணரும் போது, தன்னிடம் தனக்குத் தேவையான அனைத்தும் இருக்கின்றன என்ற மன அமைதியை அடைகிறது. ஒன்றுமில்லை என்ற பிச்சைக்கார மனநிலையிலிருந்து எனக்குத் தேவையான அனைத்தும் இருக்கின்றன என்ற ஒரு அரசனின் மனநிலைக்கு மாறுகிறது. போதும் என்ற மனநிலை மட்டுமே நம்மை ஒரு அரசனைப் போன்று, அரசியைப் போன்று தலை நிமிர்ந்து, திருப்தியுடன் வாழ வழி வகுக்கும்.

இருப்பதைக் கொண்டும் திருப்தியடையாமல், உலகியலில் எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கும் மனம் தன்னிடம் என்னென்ன இருக்கின்றன என்பதை கவனிக்கத் தொடங்கும் போதும், தனது தேவைகளையும் ஆசைகளையும் என்றுமே திருப்தி செய்ய முடியாது என்பதை சுயமாக உணரும் போதும், தேடலைக் குறைத்துக் கொள்கிறது. வயிறு போதும் என்று சொன்னவுடன் உணவு உண்பதை நிறுத்துபவர்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். தனது வாழ்க்கைக்குத் தேவையான வசதிகள் கிடைத்ததும் போதும் என்று திருப்தி அடைபவர்கள் நிம்மதியாக மனத்திருப்தியுடன் வாழ்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X