போலியான கிரிப்டோ நாணயங்கள். ஒரு நல்ல பொருள் இருந்தால், அதற்கு மாற்றாக அதே உருவத்தில் சில தரம் குறைந்த பொருட்கள் சந்தையில் அறிமுகமாவதும், சில போலியான பொருட்கள் அறிமுகமாவதும் வழக்கம். இவை அன்றாட வாழ்க்கையில் நாம் காணக்கூடிய நிகழ்வுகளாகும். இதே நிலை கிரிப்டோ கரன்சி சந்தையிலும் நடைமுறையில் உள்ளது.
பெரிய முதலீடு செய்யப்பட்டு, பலத்த பாதுகாப்புடன், முறையாகக் கட்டமைக்கப்பட்ட, சரியான நிர்வாகக் குழுக்களுடன் சில கிரிப்டோ நாணயங்கள் அறிமுகமாகியுள்ளன. இதே காலகட்டத்தில் முதலீடு இல்லாத, பாதுகாப்பு இல்லாத, சரியான நிர்வாகக் குழு இல்லாத, வாங்க மட்டுமே முடியும் ஆனால் பயன்படுத்தவோ, பரிமாற்றம் செய்யவோ, மீண்டும் விற்பனை செய்யவோ முடியாதவாறு பல நூறு கிரிப்டோ நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.
ஒரு இணையதளம் இருக்கும், கவர்ச்சியான விளம்பரம் இருக்கும், எதிர்காலத்தில் பெரிய அளவில் அந்த கிரிப்டோவின் மதிப்பு உயரும் என்ற கவர்ச்சிகரமான விளம்பரம் இருக்கும். மற்றபடி சந்தை மதிப்போ, வெளியிடப்பட்ட கிரிப்டோ நாணயத்துக்கு ஏற்ப பணக் கையிருப்போ, தங்கம் கையிருப்போ, நிலையான லாபம் தரக்கூடிய தொழிலோ இருக்காது.
இவ்வாறான இணையதளங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு பலர் ஏமாந்து போய் தங்களின் சேமிப்பை இழந்து விடுகிறார்கள். அல்லது மதிப்பில்லாத கிரிப்டோ நாணயங்களை கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாது விழித்துக் கொண்டிருக்கிறார்கள். கிரிப்டோ நாணயங்களை வாங்குவதற்கு முன்பாக ஒன்றுக்குப் பத்து முறை நன்றாகச் சிந்தித்து, ஆராய்ந்து பின் தேவைப்பட்டால் நேரடியாக சரியான கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும்.