வாழ்க்கை

பிறருக்கு பயனுள்ள வாழ்க்கையை வாழ்வோம்

பிறருக்கு பயனுள்ள வாழ்க்கையை வாழ்வோம். “ஊக்குவிப்பவர்கள் ஊக்குவித்தால், பாக்கு விற்பவர்கள் தேக்கு விற்பார்கள்” என்பது பழமொழி. மனிதன் இந்த பூமிக்கு தனியாகத் தான் வருகிறான் ஆனால் மனிதனால் தனியாக வாழ முடியாது. வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும், ஒரு மனிதனால் தனியாக இருக்க முடியும், ஆனால் தனியாக வாழ முடியாது. வாழ்க்கை என்பது தனித்திருத்தல் அல்ல, வாழ்க்கையைத் துறந்து சந்நியாசம் புகுந்தால் தனியாகத் தான் இருத்தல் வேண்டும். ஆனால் இந்த வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க விரும்பினால், குடும்பம், உறவு, நட்பு, சமுதாயம், என இணைந்து கூட்டாகத்தான் வாழ வேண்டும்.

ஒரு கையை தட்டினால் ஓசை வராது என்பார்கள். உண்மையில் ஒற்றைக் கையால் தட்ட முடியாது என்பதுதான் நடைமுறை. இரண்டு கரங்கள் இணையும் போதுதான் ஓசையே உண்டாகும் என்றால், இரண்டு கரங்கள் இணைந்து ஒத்துழைத்தால் தானே மேன்மை உண்டாகும்.

மனிதனின் உடல் மற்றும் மனம் எனும் இரண்டு பகுதிகள் இணைந்து செயல்படும் போது ஆரோக்கியமும் அமைதியும் உண்டாகும். கணவன் மனைவி என இரண்டு உறவுகள் இணைந்து செயல்படும் போது தாம்பத்தியத்தில் அன்பும் நம்பிக்கையும் உண்டாகும். பெற்றோர் பிள்ளைகள் இணைந்து செயல்படும் போது பாசமும் நெருக்கமும் உண்டாகும். தனி மனிதனும் உறவுகளும் இணைந்து செயல்படும் போது நேசமும் நெருக்கமும் உண்டாகும். தனிமனிதனும் சமுதாயமும் இணைந்து செயல்படும் போது சமுதாயத்தில் மேன்மையும் வளர்ச்சியும் உண்டாகும்.

தனி மனிதனான நாம் மற்ற மனிதர்களுக்கு பயனுள்ள வாழ்க்கையை வாழ முயல வேண்டும். பெரிதாக எந்த உதவியும் செய்ய வேண்டும் என்றில்லை. முடிந்த அளவு உதவலாம். நம்மால் எவையெல்லாம் முடியும்? எவையெல்லாம் முடியாது என்பது நமக்குத் தெரியுமல்லவா? இராமனுக்கு அணில் உதவியதைப்போன்று, நம்மால் முடிந்த சிறிய உதவியை நமது குடும்பத்தாருக்கோ, உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, அல்லது மற்றவர்களுக்கோ வழங்கலாம்.

என்னிடம் இருப்பவை எனக்கே போதாது என்ற எண்ணம் பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கும். இதை பிச்சைக்கார புத்தி என்பேன் நான். என்னிடம் இல்லை, இருப்பது போதாது என்று இறுதிவரையில் தன்னிடம் எவையெல்லாம் இல்லை, எவையெல்லாம் குறைகின்றன என்பதை மட்டும் பார்த்து ஒரு பிச்சைக்காரனைப் போன்ற ஒரு மனநிலையுடன் சிலர் வாழ்வார்கள். இந்த எண்ணத்தின் விளைவாக அவர்களிடம் என்ன இருந்தாலும், எவ்வளவு இருந்தாலும் போதவில்லை என்ற குறுகிய எண்ணத்தோடு வாழ்வார்கள். தன்னிடம் இருப்பதை தானும் அனுபவிக்காமல் மற்றவர்களையும் அனுபவிக்கவிடாமல், மூன்றாவது மனிதர்கள் கூறு போட்டுக்கொள்ளும் நிலைமையை உருவாக்கிவிடுவார்கள்.

போதும் என்ற மனநிலை சுலபத்தில் உருவாகிவிடாது. நம்மிடம் இருப்பதை மற்றவர்களுக்குக் கொடுக்க தொடங்கினால் மட்டுமே மற்றவர்களிடம் இல்லாதவை, நம்மிடம் என்னவெல்லாம் இருக்கின்றன என்பது புரியும். நம்மிடம் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதை உணர தொடங்கும் போதுதான் திருப்தி உண்டாகத் தொடங்கும். இருப்பதைக் கொண்டு திருப்தியடையத் தொடங்கும்போது தான் போதும் என்ற எண்ணம் உருவாகத் தொடங்கும்.

இது ஒரு பெரிய சுழற்சி ஆனால் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதன் முதல் படி. பணம், செல்வம், உடல், மனம், எண்ணம், என்று உங்களால் இயன்ற வகையில் கொடுக்க தொடங்குங்கள் மற்றவர்களுக்கு உதவுங்கள், தோள்கொடுங்கள். நாம் சொல்லும் ஒரு வார்த்தை ஒரு மனிதனின் வாழ்க்கையையே மாற்றிவிடலாம். நாம் சொல்லும் ஒரு வார்த்தை ஒரு உறவைச் சேர்த்து வைக்கலாம். நாம் செய்யும் ஒரு சிறிய உதவி பெரிய மாற்றத்தைக் கொண்டுவரலாம்.

கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் உண்டாக்குங்கள். அதில் உறுதியாக இருங்கள் கொடுக்கும் அளவுக்கு உங்கள் வாழ்க்கை மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *