மனிதர்களுக்கு வழங்கப்படும் பிரபஞ்சத்தின் வழிகாட்டுதல்கள். மனிதர்கள் தங்களின் வாழ்க்கையை சிறந்த முறையில் வாழ்வதற்கு அனைத்து திசைகளிலிருந்தும் அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வந்துகொண்டே இருக்கும். ஆன்மாவும், ஆழ்மனமும், பிரபஞ்சமும், தெய்வங்களும், கண்ணுக்குத் தெரியாத மற்ற சக்திகளும், மனிதர்களுக்கு வழிகாட்டிக் கொண்டே இருக்கின்றன. வாழ்க்கையைத் தெளிவில்லாமலும் அவசரத்திலும் வாழ்பவர்களுக்கு இந்த வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் புரிவதில்லை.
மனிதர்களுக்கு வழங்கப்படும் செய்திகளும் வழிகாட்டுதல்களும் எவ்வாறு இருக்கும்?
மனிதர்களுக்கு வழங்கப்படும் வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் உணர்வுகளாகவும், எண்ணங்களாகவும், காட்சிகளாகவும், உருவங்களாகவும், சின்னங்களாகவும், இருக்கும்.
உதாரணத்திற்கு ஒருவருக்கு ஒரு விசயத்தை செய்யலாமா வேண்டாமா என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கான வழிகாட்டுதல் இந்த விசயத்தைச் செய் அல்லது செய்யாதே என்றோ, அந்த விசயத்தை ஏன் செய்ய வேண்டும் அல்லது ஏன் செய்யக்கூடாது என்றோ இருக்காது. மாறாக அவருடைய உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சியான, ஆனந்தமான அல்லது அமைதியான உணர்வு தோன்றும், இது அவருக்கு இந்த விசயத்தை செய்யலாம் என்று கொடுக்கப்படும் அனுமதியாகும். அல்லது அச்ச உணர்வோ, ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதைப் போன்ற உணர்வோ, அல்லது கவலை உணர்வோ உருவாகும், இது அவருக்கு அந்த செயலைச் செய்யக்கூடாது என்று வழங்கப்படும் எச்சரிக்கையாகும்.
பிரபஞ்சம் பேசும் மொழி
ஒரு விசயத்தை செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டு இறைவனிடமும் இயற்கையிடமும் நாம் தீர்வை நாடும் போது, சற்று நேரத்தில் பத்திரிகையில் இருந்தோ, புத்தகத்தில் இருந்தோ, வெளியில் இருந்தோ, மற்ற மனிதர்களிடம் இருந்தோ, ஏதாவது ஒரு சொல் அல்லது ஒரு காட்சி நம்மைக் கவர்ந்து இழுக்கலாம். அந்தக் காட்சியில் அந்த இடத்தில் இருக்கும் எழுத்து, சொல், சித்திரம், உருவம், அறிகுறி, போன்றவற்றை வைத்து நமக்கு என்ன பதில் வழங்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
உதாரணத்திற்கு என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறேன். ஒரு நாள் நான் காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது; மனிதர்கள் உறங்கும் போது என்ன நடக்கிறது? மனிதர்கள் உறங்கும் போது ஆன்மா என்ன செய்கிறது? மனம் என்ன செய்கிறது? என்பன போன்ற கேள்விகளும் சிந்தனைகளும் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. அப்போது என் உள்ளுணர்வு காரின் வானொலியை சிங்கப்பூர் சேனலுக்கு மாற்ற வேண்டும் என்று தூண்டியது. சிங்கப்பூர் வானொலியான 96.8க்கு நான் மாற்றிய பொழுது அதில் டாக்டர் காதர் இப்ராஹிம் அவர்கள் தூங்கும் போது மனித உடலிலும் மனதிலும் என்னென்ன விசயங்கள் நடக்கின்றன என்பதை விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார்.
இன்னொரு தடவை காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது; ஒரு இடத்துக்குச் செல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. குழப்பத்தில் இருக்கும் போது தெருவில் “Just Do It” என்ற ஒரு வாசகம் என் கண்ணில் எதேச்சையாகத் தென்பட்டது. இதுதான் எனக்குக் கிடைத்த பதில். பெரும்பாலான வேளைகளில் எனக்குக் குழப்பங்களோ, சந்தேகங்களோ, தோன்றினால் பிரபஞ்சத்திடம் இருந்து எனக்கு வழிகாட்டுதல்களும் காட்சிகளும் கிடைக்கும். இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த பிரபஞ்சம் வழிகாட்டிக் கொண்டுதான் இருக்கிறது, அவர்கள்தான் அந்த வழிகாட்டுதல்களைப் புரிந்துகொள்வதற்கு முயற்சிசெய்ய வேண்டும்.
பேசுவது மனமா? பிரபஞ்சமா? எவ்வாறு புரிந்து கொள்வது
பிரபஞ்சத்தின் வழிகாட்டுதல்களை செவிமடுக்க முயற்சி செய்யும் போது, தொடக்கத்தில் மனம்தான் நம்மிடம் பேசத் தொடங்கும். மனதின் வார்த்தையையும் பிரபஞ்சத்தின் வார்த்தையையும் பிரித்துப் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். பிரபஞ்சம் நமக்கு வழிகாட்டுகிறது என்ற புரிதல் உண்டான உடனே படிப்படியாக மனதின் எண்ணங்களையும் பிரபஞ்சத்தின் அறிவிப்புகளையும் பிரித்துப் பார்க்கக்கூடிய தன்மை நமக்குள் உருவாகிவிடும்.
பிரபஞ்சத்தின் அல்லது இறைவனின் வழிகாட்டுதலைப் பின்பற்றினால், வாழ்க்கையில் எல்லா வகையான இன்பமும், வெற்றியும், மகிழ்ச்சியும், நிம்மதியும், தானாக நம்மை வந்தடையும்.