மதிய நேரத்து உஷ்ணம்
பேருந்தில் அதிகரிக்க
ஜன்னலைத் திறந்து வைத்து
புறப்படக் காத்திருந்தான்
டேய்… பார்த்துப்போடா என
தன் பெயரில் அலட்டல் வர
அதிர்ச்சியும் ஆர்வமும் கூடி
ஒலி வந்த வழி தேடினான்
நீலவண்ண சேலையுடன்
இளம் பெண்ணொருத்தி
சிறுவனின் கரம்பற்றி
கூட்டத்தைக் கடந்து சென்றாள்
அவன் இரு கண்கள்
அவள் பின்னே சென்றன
மனமோ பத்து வருடங்கள்
பின்னோக்கிச் சென்றது
அதே பெண் அதே அலட்டல்
அன்று இவன் காதலியாக
இனிப்பும் புளிப்பும் கலந்த
நினைவுகள் நிழலாடின
சூழ்நிலையால் பிரிந்தவர்கள்
மீண்டும் காணமுடி – பல
வருடங்கள் காத்திருந்து
முகமும் மறந்து போனான்
எதேச்சையாக மீண்டும் அவள்
எப்படி இருக்கிறாய்?
என ஒரு வரி கேட்க
முகம் பார்த்துப் புன்னகைக்க
அவள் முகத்தையாவது
முழுமையாகப் பார்த்துவிட
அவன் மனம் துடித்தது
நாகரிகம் தடுத்தது
சற்று நிதானித்துக் கொண்டு
நிலைமையை உணர்ந்தான்
அவள் காணாத வகையில்
சூதானமாக
அவன் முகத்தை
ஜன்னலுக்குப் பின்னும்
அவள் நினைவுகளை
கண்களுக்குப் பின்னும்
மறைத்துக்கொண்டு
பயணத்தைத் தொடர்ந்தான்
அவளை துணைக்கு
அழைத்துக்கொண்டு..!
Leave feedback about this