பதினெட்டாம் நூற்றாண்டில் நாகரிகம் அறிமுகமானது. உலகின் பெரும்பாலான மனிதர்கள் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகுதான் விலங்கு நிலையில் இருந்து படிப்படியாக மனிதர்களாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஆங்கிலேயர்களின் நம்பிக்கை.
இவ்வாறு ஆங்கிலேயர்கள் நம்புவது மட்டுமல்லாமல் அவர்கள் ஆட்சி செய்த அத்தனை நாடுகளிலும் பள்ளிகளில் பாடமாக்கி மனிதர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ஒரு கதை சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஒரு நாள் ஒரு மகன் தன் தாயிடம் “அம்மா மனிதர்கள் எவ்வாறு இந்த பூமியில் தோன்றினார்கள்” என்று கேட்டான். அதற்கு அவனது தாய் “தேவர்கள் வானத்திலிருந்து மனிதர்களை பூமிக்கு அழைத்து வந்தார்கள்” அதனால் தான் இங்கு மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கூறினார்.
அதற்கு மகன் “மனிதர்கள் குரங்கிலிருந்து தோன்றினார்கள் என்று அப்பா கூறினாரே” என்றான். அதற்கு அவன் தாய், “நான் எனது பரம்பரை தோன்றிய விதத்தைக் கூறினேன். உன் அப்பா அவர் பரம்பரை தோன்றிய விதத்தைக் கூறினார்” என்று சொன்னாளாம்.
ஆங்கிலேயர்களின் பார்வையில், மனிதனின் வளர்ச்சியும், நாகரிகமும் என்பது ஆங்கிலம் பேசுவது, ஆங்கிலேயர்களின் ஆடைகளை அணிவது, நவீன கருவிகள், மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தான். நவீன மனிதர்களைப் பொறுத்தவரையில் மனிதர்களின் உதவியும், மனித உருவாக்கங்களின் தேவையும் இல்லாமல், இயற்கையின் கொடைகளை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் காட்டுமிராண்டிகள்.
நம் கண்முன்னே வாழும் குழந்தைகள் போதும் போட்டியும் பொறாமையும் பேராசையும் இல்லாத மனிதர்கள் எவ்வாறு வாழ்வார்கள் என்பதைப் புரிந்துகொள்ள. ஒரு குழந்தை இந்த மண்ணில் பிறக்கும் போது எந்த தீய குணங்களும் இல்லாத தெய்வீகத் தன்மையுடன் பிறக்கிறது. மனம் வளரும் போது தான் நல்லவனாகவும் தீயவனாகவும் மாறுகிறது.
நாகரிகம் மற்றும் வளர்ச்சி என்ற பெயரில் போட்டி பொறாமைகளும் சண்டை சச்சரவுகளும் உருவான பிறகுதான் மனிதர்களுக்கு இடையில் விலங்கு குணங்கள் அதிகரிக்கத் தொடங்கின. அதுவரையில் மனிதர்களின் வாழ்க்கை அன்பும் கருணையும் நிறைந்ததாகவே இருந்தது. பண்டைய மனிதர்கள் தனது தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்துகொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். தற்போதைய மனிதர்கள்தான் ஆசைகளை வளர்த்துக் கொண்டு துன்பப்படுகிறார்கள்.