பஞ்சபூதச் சக்திகளும் உணவின் சுவைகளும்
ஆரோக்கியம்

பஞ்சபூதச் சக்திகளும் உணவின் சுவைகளும்

பஞ்சபூதச் சக்திகளும் உணவின் சுவைகளும். மனிதனின் உடலானது பஞ்சபூத சக்திகளின் கலவையினால் உருவானது. பஞ்சபூத சக்திகளால் உருவான இந்த உடல், இயங்குவதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும், நோய்களை குணப்படுத்திக் கொள்வதற்கும், நீண்ட நாட்கள் வாழ்வதற்கும், பஞ்சபூத சக்திகள் இன்றியமையாதவையாக இருக்கின்றன.

பஞ்சபூத சக்திகளை நம் உடலானது வெளியிலிருந்து சிறிதளவு பெற்றுக் கொண்டாலும், பெரும்பான்மையான சக்திகளை உடல் சுயமாகவே உற்பத்தி செய்துகொள்கிறது. நம் உடலின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும் அதற்குரிய பஞ்சபூத சக்தியை உருவாக்கும் தன்மையோடுதான் படைக்கப் பட்டிருக்கிறது. இருதயம் நெருப்பு சக்தியையும், மண்ணீரல் நிலம் சக்தியையும், நுரையீரல் காற்று சக்தியையும், சிறுநீரகம் நீர் சக்தியையும், கல்லீரல் ஆகாய (மரம்) சக்தியையும் உற்பத்தி செய்கிறது.

நாம் உண்ணும் உணவும், உணவின் சுவைகளும், உடலின் உள்ளுறுப்புகளுக்கு சக்தியளிக்கவும், பஞ்சபூத சக்திகளை உற்பத்தி செய்யவும் பேருதவியாக இருக்கின்றன. குறிப்பாகச் சொல்லப்போனால் உணவில் உள்ள சுவைகளே ஆற்றலை உருவாக்க பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால்தான் உணவை உட்கொள்வதற்கு முன்பாக இனிப்புச் சுவையுள்ள பழங்களை உட்கொள்வது ஒரு வழக்கமாக நம் கலாச்சாரத்தில் இருக்கிறது.

உணவு வேலைகளுக்கு முன்பாக இனிப்பான பழங்களை உட்கொண்டால் நமது மண்ணீரலும் வயிறும் உணவை ஜீரணிக்க தயார் நிலையில் இருக்கும்; அதற்குப் பிறகு உட்கொள்ளும் உணவு எளிதில் ஜீரணமாகும். இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கரிப்பு, மற்றும் காரம், என ஆறு சுவைகளும் உடலுக்கு மிகவும் அவசியமானவை. உடலில் பஞ்சபூத சக்திகள் சமநிலையில் இருக்க வேண்டுமென்றால் எந்த சுவையையும் ஒதுக்கக்கூடாது. எல்லாச் சுவையையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நம் உடல் சுயமாக உற்பத்தி செய்துகொள்ளும் பஞ்சபூத சக்திகளின் அளவு குறையும் போது, அந்த சுவை தொடர்புடைய உறுப்புகளில் கழிவு தேக்கங்களும், பலவீனங்களும், பாதிப்புகளும், குறைபாடுகளும், நோய்களும், உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சுவைகள், இயற்கையான சுவைகளாக இருக்க வேண்டும். செயற்கையான சுவைகளை உட்கொள்ளும் போது, அந்த சுவைக்குத் தொடர்புடைய உறுப்புகள் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளன.

இயற்கையிலிருந்து கிடைக்கக் கூடிய உணவுகளான, பழங்கள், காய்கறிகள், தாவரங்கள், மற்றும் கிழங்கு வகைகள், ஆறு சுவைகளையும் கொண்டவை. அதாவது ஐந்து பஞ்சபூத சக்திகளையும் கொண்டவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வோம். வாழைப்பழத்தில் இனிப்புச் சுவை பெருமளவு இருப்பதால் வாழைப்பழம் இனிப்பாக இருக்கிறது. ஆனாலும் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கரிப்பு, மற்றும் காரம், என ஆறு சுவைகளும் வாழைப்பழத்தில் மறைவாக இருக்கும். மற்ற சுவைகள் குறைந்த அளவில் இருப்பதால், நம் நாக்கால் அவற்றை எளிதில் உணர முடிவதில்லை.

அதைப்போல் பழங்கள், காய்கறிகள், கிழங்குகள், அரிசி, கோதுமை, பருப்புகள், தேன், போன்றவற்றிலும் ஆறு சுவைகளும் இருக்கும். உணவில் எந்த சுவை பெருமளவு இருக்கிறதோ அந்த சுவையை மட்டுமே நம் நாவால் உணர முடிகிறது. உணவு சுத்திகரிக்கப் படும்போதும், பதப்படுத்தப்படும் போதும், இரசாயனங்கள் கலக்கப்படும் போதும், ஓரிரு சுவைகளை இழந்துவிடுகின்றன.

Leave feedback about this

  • Rating
X