பொருளாதாரம்

பங்குச்சந்தையில் செய்யக்கூடாத தவறுகள்

பங்குச்சந்தையில் செய்யக்கூடாத தவறுகள். முறையாகவும் நிதானமாகவும் ஆராய்ந்து திட்டமிட்டு செயல்பட்டால் பங்குச்சந்தை ஒரு நல்ல வருமானம் தரக்கூடிய முதலீடாக அமையும். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் பொதுவாக செய்யும் சில தவறுகளே அவர்கள் நஷ்டமடையக் காரணமாகின்றன. அவற்றைத் திருத்திக் கொண்டாலே பங்குச் சந்தையில் பெரும்பாலும் நஷ்டம் உண்டாகாது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்னதாக நிறுவனங்களின் பங்கையும் பங்குச் சந்தையையும் பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். குறைந்து ஓர் ஆண்டுக்காலம் பங்குச் சந்தையையும், நிறுவனங்களையும், பங்குகளையும், ஆராய்ந்த பிறகே பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மொத்தச் சேமிப்பையும் அல்லது கையில் இருக்கும் மொத்தத் தொகையையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்துவிடக் கூடாது. குறைந்தது உங்களின் ஆறு மாதக் குடும்ப செலவுக்குத் தேவைப்படும் தொகையையும், அவசரக் காலங்களில் பயன்படுத்தத் தேவையான தொகையையும் வங்கியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் அவசரக்காலத் தேவைக்கு போக மீதம் இருக்கும் பணத்தை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்.பங்குகள் எந்த நேரத்திலும் இறங்கக் கூடியவை அதனால் நீங்கள் இழந்துவிடத் தயாராக இருக்கும் தொகைக்கு மட்டுமே பங்குகள் வாங்க வேண்டும்.

பங்குச் சந்தையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் சூதாடக் கூடாது. (F&O) Future and options trading என்பது மொத்த முதலீட்டையும் கரைத்து விட்டு மேலும் கடன்காரனாக்கக் கூடிய சூதாட்டமாகும்.

குறுகிய கால லாபத்திற்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்வது மிகப்பெரிய தவறாகும். குறுகிய காலத்துக்கு பங்கு வாங்குவதும், விற்பனை செய்வதும் முதலீட்டை கரைத்துவிடும். பங்குச் சந்தையில் பல்வேறு வகையான சேவைக் கட்டணங்களும், வரிகளும் விதிக்கப்படுவதால் இவற்றின் மூலமாக லாபத்துடன் சேர்த்து போட்ட முதலும் கரைந்துவிடும்.

எவ்வளவு சிறந்த பங்காக இருந்தாலும் கடன் வாங்கி பங்கு வாங்கக் கூடாது. பங்குச் சந்தை எந்த நேரத்திலும் எதிர்பாராத விதமாக தலைகீழாக மாறலாம். நீங்கள் போட்ட முதலீடு மூழ்கிப் போகும் நிலைக்குக் கூட சில பங்குகள் செல்லலாம் அதனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் கடன் வாங்கி பங்கு வாங்கக் கூடாது.

சரியான நிறுவனத்தின் பங்கை வாங்கியபின், அந்தப் பங்கின் விலை குறைந்துவிட்டால் பயப்படவோ அதனை விற்றுவிடவோ தேவையில்லை. மீண்டும் அதன் விலை அதிகரிக்கும் வரையில் காத்திருந்தால் போதும்.

தொடர்ந்து ஒரு பங்கின் விலை குறைந்து கொண்டிருந்தால் அந்த நிறுவனம் கஷ்டத்தில் அல்லது கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கலாம். அதன் விலை பூஜ்யமாக (0) கூட மாறலாம்.

ஒரு பங்கின் விலை குறைந்து கொண்டே போகிறது என்பதற்காக குறைய குறைய தொடர்ந்து அதே பங்கை வாங்கிக் கொண்டிருக்கக் கூடாது. இது பெரும் கடனையும் கஷ்டத்தையும் உருவாக்கக்கூடும்.

பங்குச் சந்தையில் எப்போதும் நிதானமாகவும் தெளிவாகவும் செயல்பட வேண்டும் உணர்ச்சி வசப்பட்டு ஒரு பங்கை வாங்குவதோ விற்பதோ கூடாது.

பொது ஊடகங்கள் மற்றும் செய்திகளில் வரும் விசயங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு பங்கை வாங்கவும் விற்கவும் கூடாது. அந்தச் செய்தி தவறாக இருக்கும் பட்சத்தில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கக் கூடும்.

ஒரு நிறுவனத்தையும் (company) அதன் நிர்வாகத்தையும் (management) அதன் நிதிநிலை அறிக்கையையும் (financial report) சரியாக ஆராய்ந்து அதன் பங்கை (stock) வாங்கினால் பாதுகாப்பானதாக இருக்கும். சரியாக நிர்வகிக்கப்படும் பங்கைக் குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு (long term) வைத்திருந்தால் நிச்சயமாக நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.