பள்ளிக்கூடங்களில் கட்டாய தடுப்பூசி. இந்த கட்டுரையை பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு நான் எழுதிய கடிதம் என்று கொள்ளலாம்.
மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் சில, அதன் மாணவர்கள் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதைக் கட்டாயமாக்கி இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். என் நண்பர்களின் பிள்ளைகள் சிலருக்குத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் பள்ளிக்கூடத்திற்கு வரக் கூடாது என்று தமிழ்ப்பள்ளி நிர்வாகத்திடமிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக அவர்களின் பெற்றோர்கள் என்னிடம் கூறினார்கள்
எனது மூன்று பிள்ளைகள் மலாய் தேசிய உயர்நிலை மற்றும் தொடக்கநிலை பள்ளிகளில் பயில்கிறார்கள். என் பிள்ளைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா? என்றும், கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்கிறீர்களா? என்றும் சம்மதம் கேட்டு கடிதம் வந்ததே ஒழிய யாருக்கும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கட்டளை வரவில்லை. மலேசிய அரசாங்கம் கூட கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறதே ஒழிய கட்டாயமாக்கவில்லை.
உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கும் கோவிட் நாடகத்தைப் பற்றியும் கிருமிகளின் தன்மைகளைப் பற்றியும் புரிதல் இருப்பதனால், கோவிட் உட்பட எனது பிள்ளைகளுக்கு எந்த தடுப்பூசியும் செலுத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். காரணம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வில்லை என்றால் உருவாகக் கூடும் என்று கூறப்படும் தொந்தரவுகளை விடவும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு உருவாகக் கூடிய பாதிப்புகள் அதிகம்.
என் பிள்ளைகள் பயிலும் எந்தப் பள்ளியிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் ஆக்கப்படவில்லை. எனது மூன்று பிள்ளைகளும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் தான் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான தேசியப் பள்ளிகளில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமில்லை ஆனால் ஒரு சில தமிழ்ப் பள்ளிகளில் மட்டும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்குவது ஏன்?
மலேசியாவில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுத்ததை நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம். ஆட்டு மந்தை கூட்டத்தைப் போன்று செயல்படாமல் சிந்தித்து ஆராய்ந்து செயல்படுவதால் தான் அவர்கள் கோவிட் தடுப்பூசியை மறுக்கிறார்கள். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள்:423) என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் அதன் பொருளை உணர்ந்து செயல்படுகிறார்களா?
கோவிட் தடுப்பூசி என்பது என்ன? அதன் நன்மைகள் என்ன? அதன் தீமைகள் என்ன? பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் கோவிட் தடுப்பூசிகள் என்னென்ன பக்க விளைவுகளை உருவாக்கக் கூடும் என்பதை அவர்கள் ஆராய்ந்து அவற்றை சிந்தித்தார்களா? குறைந்தபட்சம் தடுப்பூசிகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதை பற்றியாவது அவர்கள் அறிந்திருக்கிறார்களா? இவை எதுவும் இல்லாமல் மருத்துவர்கள் கூறுகிறார்கள், மருந்து கம்பெனிகள் கூறுகின்றன, அரசாங்கம் கூறுகிறது, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது என்று கண்மூடித்தனமாக நம்புவது ஆசிரியர்களுக்கு அழகல்லவே?
ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மையானது ஒரு மனிதனுக்கு ஒத்துக்கொள்ளும் ஒரு விசயம் இன்னொரு மனிதனுக்கு விஷமாக மாறலாம் இதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரே வகையான மருந்து அத்தனை மனிதர்களுக்கும் பயன் தருவதில்லை, சிலருக்கும் பயனான ஒரு பொருள் சிலருக்கு ஆபத்தை உண்டாக்கலாம். எந்த விசயத்தையும் கண்மூடித்தனமாக நம்பாமல் சிந்தித்து ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
மருந்து எனும் அதிகாரத்தில் எது ஆரோக்கியம்? எது மருந்து? அதை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்? என்பதை திருவள்ளுவர் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். குறைந்தபட்சம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் திருக்குறளின் “மருந்து” அதிகாரத்தை வாசித்து ஆராய்ந்து புரிந்து கொண்டு, உடலின் இயக்கத்தையும் மருத்துவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தடுப்பூசியும் மருத்துவமும் ஒவ்வொரு நபரின் உடலின் தன்மைக்கு ஏற்ப இருக்க வேண்டுமே ஒழிய அனைவருக்கும் ஒன்றாக இருப்பதில்லை. தடுப்பூசியும் மருத்துவமும் அவரவர் விருப்பப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய யாரும் யாரையும் வற்புறுத்தவோ கட்டுப்படுத்தவோ கூடாது. இறைவன் அனைவருக்கும் சிந்தனை ஆற்றலைத் தந்திருக்கிறான், சிந்தித்துச் செயல்படுங்கள்.