பள்ளிக்கூடப் பரீட்சையும் வாழ்க்கையின் பரீட்சையும். ஒரு கால கட்டத்தில் பள்ளிக்கூடங்களில் கற்றுக்கொண்ட பாடம் மாணவர்களுக்குப் புரிந்ததா என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்காக மாணவர்களுக்கு பரீட்சை நடத்தினார்கள். பரீட்சையில் தேர்வாகாத மாணவர்களுக்கு எளிமையான பாடங்களும் அதிகப் பயிற்சிகளும் கொடுத்து அவர்கள் தேர்ச்சி அடைவதற்கு ஆசிரியர்கள் உதவி புரிந்தார்கள்.
இன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும் பரீட்சைகளின் நோக்கம் மாணவர்களின் புரிதலைச் சோதிப்பதாக இருக்கவில்லை. மாறாக அவர்களை பள்ளிக்கூடங்களை விட்டு விரட்டுவதாகத் தான் இருக்கிறது.
பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பரீட்சைகள் நடத்தப்படுவதில்லை. சில வளர்ந்த நாடுகளில் இடைநிலைப் பள்ளிகளிலும் பரீட்சைகள் நடத்தப்படுவதில்லை. நான் வசிக்கும் மலேசியாவில் கூட முதல் பத்து ஆண்டுகளுக்கு எந்த பொதுத் தேர்வும் கிடையாது என்று அரசாங்கம் அறிவித்துவிட்டது.
பரீட்சைகள் நடத்தப்படவில்லை என்றால் மாணவர்கள் எப்படியாவது போகட்டும் படித்தால் என்ன, படிக்கவில்லை என்றால் என்ன என்று அரசாங்கம் எண்ணிவிட்டதாகக் கருத்தில் கொள்ள வேண்டாம். மாணவர்களின் வருகை, பாடங்களில் புரிதல், பள்ளிப் பாடங்களைக் கவனித்தல், வீட்டுப் பாடங்களைச் செய்தல், சிறிய வகுப்பறை தேர்வுகள், இவற்றைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை ஆசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள்.
மாணவர்களை வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரமாக பயன்படுத்தாமல் அறிவும் புரிதலும் கூடிய மனிதர்களாக உருவாக்குகிறார்கள்.
என்னால் முடியாது, எனக்கு பாடம் புரியவில்லை, என்னை விட மற்றவர்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள், நான் தோற்று விட்டேன், என்பன போன்ற சிந்தனைகள் இளம் பருவத்தில் உருவாக்கி விடக்கூடாது என்பதற்காகவே. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் தொடக்கப் பள்ளிகளில் பரீட்சைகள் நடத்தப்படுவதில்லை.
ஆனால் இந்தியாவில் முன்பு இருந்ததை விடவும் பரீட்சைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன தொடக்கப் பள்ளிகளிலேயே அதிகமான பரீட்சைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் நோக்கம் மாணவர்களின் அறிவை சோதிப்பதாகத் தெரியவில்லை, மாறாக மாணவர்களின் மனதுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிட வேண்டும் என்ற எண்ணம் தான் வெளிப்படுகிறது.
ஆதிக்கச் சாதியில் பிறந்த மாணவர்களுக்கு படிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன, அவர்களின் பெற்றோர்கள் படித்தவர்களாக இருப்பார்கள், துணைப்பாட வகுப்புகளுக்கும் செல்வதற்கு வசதி வாய்ப்புகள் இருக்கும். ஏழை மாணவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த மாணவர்களுக்கும் இந்த வாய்ப்புகள் இருக்காது.
ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதற்கும், ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறாமல் இருப்பதற்கும், வைதீக மதத்தின் சாதி தர்மங்களைப் பாதுகாப்பதற்கும், உருவான திட்டம் தான் இது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இளம் வயதிலேயே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விட்டால் அவன் வளர வளர, எந்த இடத்திற்குச் சென்றாலும், தாழ்வு மனப்பான்மையும் அடங்கிப் போகும் தன்மையும் அவனுக்குள் பதிந்தே இருக்கும். தமிழர்களாகிய நாம் இந்த சாதி அடுக்கு முறைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் உடைத்துக் கொண்டு முன்னேற வேண்டும்.
கல்விதான் தனி மனிதனும், குடும்பமும், சமுதாயமும் வளர்ச்சி அடைவதற்கான ஆயுதம். இதைப் புரிந்து கொண்டு எத்தனை முறை தோற்றாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, புதிதாக எத்தனை பரீட்சைகளை வைத்தாலும், அனைத்திலும் தேர்ச்சி அடைந்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
குறள் 392
கண்ணென்ப வாழும் உயிர்க்கு