அரசியல்

ஓட்டு உதிர் காலம் – தமிழ்நாட்டு அரசியல்

indian election flag background design

ஓட்டு உதிர் காலம் – தமிழ்நாட்டு அரசியல். இப்போது தமிழகத்தை… இல்லை இல்லை இந்தியாவையே தேர்தல் மேகம் சூழ்ந்துள்ளது. தமிழ் நாட்டின் சாபக்கேடு என்னவென்றால் தேர்தல் மேகம் சூழ்கையில் மட்டுமே மக்களுக்கு செழுமையும் உண்டாகும். தேர்தல் மேகம் கலைந்ததும் கோடைக் காலம் தொடங்கிவிடும். மக்களை துன்பங்கள் வாட்டியெடுக்கும்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என்று யார் வெற்றிப் பெற்றாலும் தமிழகத்தில் எந்த மாற்றமும் உண்டாவதில்லை. காரணம் இங்கே நடப்பது ஆட்சி மாற்றம் அல்ல ஆட்சியில் இருப்பவர்களின் பெயர்கள் மட்டுமே மாறுகின்றன. அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.

எப்படியாவது, எதை இழந்தாலாவது, எதைக் கொடுத்தாலாவது, எவ்வளவு செலவு செய்தாலாவது, ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும். ஆட்சிக்கு வந்த பிறகு செலவு செய்த பணத்தை பல மடங்காகத் திரும்ப எடுத்துவிட வேண்டும். இதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. இதற்காக எதையும் துணிந்து செய்வார்கள். மக்களின் நலன்களைப் பாதுகாப்பதுதான் அரசியல் என்பதிலிருந்து மாற்றி பணம் சம்பாதிக்கும் தொழில் நிறுவனமாக அரசியலை மாற்றிவிட்டார்கள்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் மக்களுக்கும் இது பழகிவிட்டது. சினிமா மோகத்தினால் நடிகருக்கு ஓட்டுப் போடுவது. மேடையில் நன்றாகப் பேசுகிறார் என்பதற்காக ஓட்டுப் போடுவது. தனக்குப் பரிச்சயமான ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதற்காக ஓட்டுப் போடுவது. இதுதான் தமிழக மக்களின் வழக்கமாக இருக்கிறது.

தேர்தல், ஓட்டுப்போடும் ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையையும் மாற்றக்கூடியது. ஒவ்வொரு தேர்தலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த மக்கள் எவ்வாறான வாழ்க்கையை வாழப் போகிறார்கள் என்று முடிவு செய்கிறது என்பதை மக்கள் உணர்ந்து கொள்வதில்லை.

நாங்கள் வெற்றி பெற்றால் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று மேடைகளில் கொக்கரிக்கும் அரசியல்வாதிகள். வென்ற பிறகு எதையுமே செய்வதில்லை. மக்களும் எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்பதுமில்லை. காரணம் மறதி மற்றும் லஞ்சம்.

மக்களே! எதுவெல்லாம் உங்களின் உரிமை?. ஒரு மாநிலக் கட்சி எதையெல்லாம் உங்களுக்குக் கொடுக்க முடியும்?. எதையெல்லாம் உங்களுக்குக் கொடுக்க வேண்டும்? எவற்றையெல்லாம் உங்களுக்குக் கொடுக்காமல் ஏமாற்றினார்கள் என்று தெரிய வேண்டுமா? இதுவரையில் ஆண்ட (சுரண்டிய) கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் பாருங்கள். கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இருக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் ஆளும் காட்சிகள் நமக்குக் கொடுத்திருக்க வேண்டியவை. ஆனால் எந்தக் கட்சியும் கொடுக்கவில்லை.

அரசியலில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள். ஒவ்வொரு அரசியல்வாதியின் குடும்பமும் பல்லாயிரக் கோடி சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். எங்கிருந்து வந்தது இந்தப் பணமெல்லாம்? அவர்கள் என்ன ராஜ பரம்பரையில் இருந்து வந்தவர்களா?

நீங்கள் பயன்படுத்த வேண்டிய சாலைகளும், பாலங்களும், மருத்துவமனைகளும், பொது வசதிகளும், அவர்களின் சொத்துக்களாக மாறி விட்டன. மாநில அரசின் வருவாயும் மத்திய அரசு ஒதுக்கும் நிதிகளும் சுரண்டப்பட்டு அவர்களின் சொத்துக்கள் ஆயின. தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் பெரிதாக எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை ஆனால் தமிழகத்தின் கடன் மட்டும் அதிகரித்துள்ளது. இந்தக் கடன்களை வாங்கி அவர்கள் என்ன செய்தார்கள்? வேறொன்றுமில்லை அரசியல்வாதிகள் அவர்களின் வாய்களில் போட்டுக்கொண்டார்கள்.

மக்களின் உரிமைகளைப் பறிப்பவர்களும், மக்களுக்குச் சேர வேண்டிய உரிமைகளைப் பறித்துத் தின்பவர்களும் கேடான ஒரு வாழ்க்கையும், முடிவும், இறைவனின் சாபமும் கண்டிப்பாக உண்டாகும். அவர்களின் தலைமுறைகள் பாதச் சுவடுகள் கூட இல்லாமல் அழிந்துவிடுவார்கள். இதை அவர்கள் உணர்வதில்லை. பணம் இருந்தால் எதையும் செய்யலாம், பணத்துக்காக எதையும் செய்யலாம், என்ற முட்டாள்தனமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உலகத்தையே ஆண்டவனும், பரம்பரை பரம்பரையாக ஆண்டவனும், கோடி கோடியாக சொத்து வைத்திருந்தவனும், இறுதியில் பரம்பரையில் ஒரு வாரிசு கூட இல்லாமல் அவர்களின் பெயர்கள் கூட யாருக்கும் நினைவில் இல்லாமல் தலைமுறையே அழிந்து போன வரலாறுகள் பலநூறு உண்டு.

அவர்கள் இருக்கட்டும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?. இந்தத் தேர்தலிலும் இனிவரும் காலங்களில் வரும் தேர்தல்களிலும் சிந்தித்துச் செயல்படுங்கள். கட்சி சின்னங்களையும், பிரபலங்களையும், இறந்து போனவர்களையும், சினிமா நட்சத்திரங்களையும், பார்த்து ஓட்டுப் போடாமல். தேர்தலில் போட்டியிடுபவர்களில் யார் நல்லவர்கள்? யார் உங்களுக்கு நன்மை செய்வார்கள்? என்று சிந்தித்துச் சரியான நபரைத் தேர்ந்தெடுங்கள்.

தேர்தலில் ஓட்டுப்போட காசு வாங்காதீர்கள் என்று நான் கூறமாட்டேன். யார் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். அத்தனை வேட்பாளர்களிடம் இருந்தும் பணம் வாங்கிக் கொள்ளுங்கள். அவை அனைத்தும் உங்களின் பணம் தான். ஆனால் ஓட்டை மட்டும் யார் உங்களுக்கு நன்மை செய்வாரோ அவருக்குச் செலுத்துங்கள். முடிந்தால் நல்லவராக படித்தவராக உள்ளூர் நபராகப் பார்த்து ஓட்டு போடுங்கள்.

சத்தியம் செய்து கேட்டல், சத்தியம் செய்து கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அக்கிரமம் செய்பவர்களுக்கு பொய்ச் சத்தியம் செய்யலாம் பயம் வேண்டாம். ஆனால் மறந்தும் அவர்களுக்கு ஓட்டை செலுத்தி விடாதீர்கள்.

உங்களுக்கு போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை என்றால் உங்களின் ஓட்டை நோட்டாவுக்கு போட்டு அந்த ஓட்டை வீணடிக்காமல் யாராவது ஒரு சுயேட்சை வேட்பாளருக்குப் போடுங்கள். நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் உங்களின், உங்கள் குடும்பத்தின், ஐந்து வருட வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதை மனதில் கொண்டு சிந்தித்துச் செயல்படுங்கள்.