ஞானம் அடைவது என்றால் என்ன? ஞானம் என்பது என்ன? அதை எவ்வாறு அடைவது? என்ற கேள்விகள் பலருக்கு இருக்கலாம். ஞானத்தை அடைவதற்காக பலவகையான பயிற்சிகளையும், முயற்சிகளையும், மேற்கொண்டவர்களில் மிகச் சொற்பமான நபர்கள் மட்டுமே ஞானம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஞானம் அடைவது மிகக் கடுமையான விசயமா என்று கேட்டால் அதுவும் கிடையாது.
ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்ட பலர் இறுதிவரையில் எதையுமே அடையாமல் மரணித்ததற்குக் காரணம், பலர் ஞானம் என்பது ஏதோ ஒரு வித்தை அல்லது சக்தி என்று எண்ணுகிறார்கள். ஞானம் என்பது அடையக்கூடிய ஒரு விசயம் அல்ல. அது ஒரு தெளிவு நிலை மட்டுமே என்பது உணராததால், அவர்கள் ஞானத்தைத் தேடிக்கொண்டே இருந்துவிட்டார்கள். உண்மையான ஞானம் என்பது என்னவென்று சொல்லட்டுமா? “அடைவதற்கு இந்த உலகில் எதுவுமே இல்லை” என்பதை உணரும் தெளிவு நிலைதான் ஞானம்.
உதாரணத்துக்கு, இந்தியக் கலாச்சாரத்தில் துறவிகளை மிகவும் மரியாதையுடனும், மதிப்புடனும் நடத்துவார்கள். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் துறவிகள் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம் இந்த வாழ்க்கையில் மனிதன் அடையக்கூடிய உச்சக்கட்டத் தெளிவான, உச்சக்கட்ட ஞானமான, துறவை அவர்கள் அடைந்து விட்டார்கள். துறவு என்பது என்னவென்றால், இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை, எதுவுமே உண்மை இல்லை, என்ற தெளிவைப் பெறுவது தான். குடும்பத்தை விட்டுவிட்டு காட்டுக்குச் செல்வதோ, பிச்சை எடுப்பதோ, ஆசிரமத்தில் சேருவதோ, துறவு அல்ல. புத்தர் குடும்பத்தை விட்டுச் சென்றாரே, பிச்சை எடுத்தாரே, காட்டில் வாழ்ந்தாரே என்று கேட்பவர்களுக்குச் சொல்கிறேன்; நாம் புத்தர் அல்ல.
குடும்பத்தைத் துறந்து, பிச்சை எடுத்து, காட்டில் வாழ்ந்த புத்தர், ஞானமடைந்த பிறகு யாரையுமே அவ்வாறு செய்யச் சொல்லவில்லை. புத்தர் ஞானம் அடைவதற்கு முன்பாக புத்த மதத்தில் சேர்ந்து, அப்போது புத்த மதத்தில் இருந்த வழக்கமான துறவு வாழ்க்கையைத் தான் அவர் பின்பற்றினாரே ஒழிய; காட்டில் வாழும் துறவு முறை என்பது கௌதம புத்தர் உருவாக்கியது அல்ல. கௌதம புத்தர் ஞானம் அடைந்த பிறகு மக்களோடு மக்களாக நாட்டில் தான் வாழ்ந்தார். குடும்பத்துடன் வாழ்ந்தாலும், சமுதாயத்தில் இருந்தாலும், தான் ஒரு தனி உயிர் என்ற தெளிவுடன் வாழ்வது தான் துறவு.
உலக ஆசைகளுக்கு அடிமையாகி, மன இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள, இந்த வாழ்க்கையைப் பயன்படுத்தாமல். பற்றின்றி அடுத்த பிறவியை நோக்கி முன்னேறுவதுதான் மிக உயரிய ஞானம். அந்த தெளிவை அடைந்த துறவிகளை இந்தியச் சமுதாயம் மிகவும் மதித்துப் பாராட்டியது.
மீண்டும் ஞானத்துக்கு வருவோம். ஞானம் என்பது அடையக்கூடிய ஒரு பொருளோ பயிற்சி செய்ய வேண்டிய ஒரு விசயமோ கிடையாது. ஞானம் அடையும் முயற்சி முதலில் நம்மில் இருந்து தான் தொடங்க வேண்டும். இறைவன் நம் உடலை எவ்வாறு படைத்திருக்கிறார் என்பதை முதலில் கவனிக்க வேண்டும், உணர வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும். மனம், புத்தி, மற்றும் உயிர், எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.
அடுத்ததாக நம்மைச் சுற்றி வாழும் மனிதர்கள், நம் குடும்பத்தார்கள், உறவினர்கள், மற்றும் நண்பர்களை ஆராய வேண்டும். அவர்கள் எவ்வாறு படைக்கப் பட்டிருக்கிறார்கள்? என்னென்ன குணாதிசயங்களுடன் படைக்கப் பட்டிருக்கிறார்கள்? அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள்? அவர்களுக்கும் நமக்கும் என்னென்ன உறவுகள் ஏற்படுகின்றன? எவ்வாறு ஏற்படுகின்றன? அவர்கள் மீது என்னென்ன உணர்வுகள் ஏற்படுகின்றன? எதனால் அவ்வாறான உணர்வுகள் ஏற்படுகின்றன? இவையெல்லாம் எதனால் ஏற்படுகின்றன என்பதைச் சிந்திக்க வேண்டும், ஆராய வேண்டும்.
அடுத்ததாக நம்மைச் சுற்றி இருக்கும் விலங்குகள். அவை எவ்வாறு படைக்கப் பட்டிருக்கின்றன? அவை எவ்வாறு வாழ்கின்றன? எவ்வாறு அன்பு கொள்கின்றன? என்பன போன்ற விசயங்களை ஆராய வேண்டும். அடுத்ததாக இயற்கை, கடல், ஆறு, குளம், மரம், செடி, கொடி, பூச்செடி, போன்றவற்றைக் கவனிக்க வேண்டும். கடல், ஆறு, குளம், எவ்வாறு இயங்குகின்றன? பூக்கள் எவ்வாறு மலர்கின்றன? இலைகள் எவ்வாறு காய்கின்றன? காய்ந்த இலைகள் எவ்வாறு உதிர்கின்றன? அதன் வேர்கள் எவ்வாறு ஆழமாகச் செல்கின்றன? போன்றவற்றைக் கவனிக்க வேண்டும், ஆராயவேண்டும். அடுத்ததாக வானம், பூமி, நிலா, சூரியன், கோள்கள், நட்சத்திரங்கள், போன்றவை, எவ்வாறு படைக்கப் பட்டிருக்கின்றன? அவை எவ்வாறு இயங்குகின்றன? என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
ஞானம் அடைய ஒரே வழி, நம்மைச் சுற்றி இருக்கும் அத்தனை உயிர்களும், படைப்புகளும், எவ்வாறு படைக்கப் பட்டுள்ளன, என்பதை உணர்ந்து கொள்வதுதான். மீண்டும் சொல்கிறேன் அறிந்துகொள்வது அனைவராலும் முடியும், உணர்வுதான் ஞானம். அறிந்து கொள்வதற்கும் உணர்ந்து கொள்வதற்கும் என்ன வித்தியாசம் என்றால் உடலுக்கும் உயிருக்கும் உள்ள வித்தியாசம். ஒரு பூனை எவ்வாறு வாழ்கிறது என்பதை யார் வேண்டுமானாலும் பார்த்து அல்லது படித்துத் தெரிந்து கொள்ளலாம் ஆனால் பூனையாகவே மாறினால் மட்டுமே பூனை என்றால் என்ன என்பதை ஒருவரால் உணர்ந்து கொள்ள முடியும்.
ஏதோ ஒன்றை அடைவதல்ல ஞானம் “அடைவதற்கு இந்த உலகில் எதுவுமே இல்லை” என்ற தெளிவுதான் ஞானம். அறிந்து கொள்வது அறிவு உணர்ந்து கொள்வது ஞானம்.