நோய்களைக் குணப்படுத்தும் மனம். நமது பாரம்பரியத்தில் மனதுக்கு மிகவும் முக்கியமான இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். அனைத்து சுபகாரியங்களையும் சடங்குகளையும் மனதைப் பிரதானமாக கொண்டே வடிவமைத்துள்ளார்கள். ஒரு ஆணையும் பெண்ணையும் தாம்பத்தியப் பந்தத்தில் இணைக்கும் நிகழ்வுக்குக் கூட, திருமணம் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள். இன்றும் நாம் துன்பத்தில், துயரத்தில், கவலையில் இருப்பவர்களை சந்திக்கும் போது கூறும் வார்த்தைகள் கூட “மனதைத் தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள்”. “மனதைத் தளரவிடாதீர்கள்” என்பதாகத்தான் இருக்கின்றன.
நோயாளிகளை சந்தித்து ஆறுதல்கள் கூறும் போது “மனதைத் தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்று தான் ஆறுதல் கூறுகிறோம். அந்த அளவுக்கு மனதின் திறனும் முக்கியத்துவமும் நம்மவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. மனம் மட்டும் நம்பிக்கை கொண்டுவிட்டால் அனைத்து நோய்களும் குணமாகும்
ஒருவருக்கு எந்த வகையான நோய் இருந்தாலும், அது எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும், அவரின் மனம் மட்டும் என் நோய்கள் நிச்சயமாக குணமாகும் என்ற தைரியத்துடன் இருந்தால். அவரின் அனைத்து நோய்களும் நிச்சயமாக குணமாக. ஒருவர் எந்த வகையான துன்பத்தில், துயரத்தில், சிக்கி இருந்தாலும் இந்த நிலை நிச்சயமாக மாறும், என் வாழ்க்கை சீர்பெறும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். அவரின் வாழ்க்கை நிச்சயமாக மேன்மை அடையும்.
மனமானது நம்பிக்கை கொள்ளும்போது, எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதிலிருந்து விடுபடத் தேவையான சக்திகளையும், திறமைகளையும் வளர்த்துக்கொள்ளும். அந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட மனிதர்களுக்கு வழிகாட்டும். அந்த வழிகாட்டுதல்களைப் புரிந்துகொண்டு பின்பற்றும் போது நிச்சயமாக அனைத்து வகையான நோய்களும், துன்பங்களும், கஷ்டங்களும் தீரும்.