வாழ்க்கை

நீங்கள் வாழ்வது யாருக்காக?

நீங்கள் வாழ்வது யாருக்காக? என்றோ ஒரு நாள் என் வாழ்க்கை மாறும் நான் நினைத்தபடி இந்த வாழ்க்கையை வாழ்வேன் என்ற லட்சியத்துடன் இருக்கிறீர்களா? அந்த ஒரு நாள் இன்று தான், உங்களுக்கான நாள் தொடங்கிவிட்டது. வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.

என் குடும்பத்துக்காக வாழ்கிறேன், என் கணவன் மனைவிக்காக வாழ்கிறேன், என் பிள்ளைகளுக்காக வாழ்கிறேன், என் பெற்றோர்களுக்காக வாழ்கிறேன் என்றெல்லாம் பொய்களைச் சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு தனிநபரும் அவரவருக்காகத் தான் தன் வாழ்க்கையை வாழ்கிறார்கள். நீங்கள் வாழ்வது உங்கள் வாழ்க்கையைத் தான், நீங்கள் வாழ்வது உங்களுக்காகத்தான்.

எனது வாழ்க்கையை நான் வாழ்கிறேன் என்ற புரிதல் இல்லாமல் பிறருக்காக நான் வாழ்கிறேன் அல்லது பிறருக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறேன் என்று மூடநம்பிக்கையில் வாழ்பவர்களுக்குத் தான் இந்த வாழ்க்கை தன்பகரமானதாகத் தெரிகிறது.

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்க்கையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் என அனைவரும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கினாலும் ஒவ்வொரு நபரும் தனிப்பட்ட வாழ்க்கையைத் தான் வாழ்கிறார்கள். தன் வாழ்க்கையில் தனிப்பட்ட அனுபவத்தைத் தான் அனுபவம் செய்கிறார்கள்.

ஒரே உடலில் இருந்தாலும் கண்களுக்கான அனுபவம் காதுகளுக்கு கிடையாது, காதுகளுக்கான அனுபவம் மூக்குக்கு கிடையாது, நாவுக்கான அனுபவம் தோலுக்கு கிடையாது. இவ்வாறு ஒரே உடலின் அங்கமாக இருந்தாலும் ஒவ்வொரு உறுப்பும் தனித்தனி அனுபவத்தை அனுபவம் செய்வதைப் போன்று ஒரே குடும்பத்தில் ஒரே சமுதாயத்தில் வாழ்ந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாகத் தான் தன் வாழ்க்கையை அனுபவம் செய்கிறார்கள்.

வாழ்க்கையும் வாழ்க்கையின் அனுபவமும் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையைப் புரிதலுடன் அனுபவித்து வாழுங்கள், உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக மகிழ்ச்சியானதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X