நாட்டு மருத்துவங்களை ஒன்று திரட்டுவோம். சில முடி திருத்தும் நண்பர்களிடம் பேசுகின்ற வாய்ப்புகள் கிடைத்தன. அவர்களில் ஒரு சிலர் எங்கள் இனம் மருத்துவர் இனம், எங்கள் மூதாதையர்கள் தான் ஒரு காலத்தில் மருத்துவத் துறைகளில் சிறந்து விளங்கினார்கள் என்றும் எங்களின் பாட்டிமார்கள் பிரசவம் பார்ப்பதில் சிறந்து விளங்கினார்கள் என்றும் கூறினார்கள்.
ஒரு பெண் கர்ப்பம் தரித்ததிலிருந்து அவருக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் எங்கள் இன பெண்கள் தான் பார்த்தார்கள் என்றார்கள். கருவில் குழந்தை சரியாக ஆரோக்கியமாக வளர தேவையான மூலிகைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவது, கர்ப்பம் முழுமை அடைந்ததும் பிரசவ நேரத்தில் உதவி செய்வது, குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையின் மற்றும் தாயின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது, என்று அத்தனை வேலைகளையும் எங்கள் பாட்டிமார்கள் செய்தார்கள் என்றார்கள்.
நாட்டு மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவங்கள் முற்றாக அழிந்துவரும் இந்த கால கட்டத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பு என்று எண்ணி நான் அவர்களிடம் சில ஆலோசனைகளைக் கூறினேன்.
ஒவ்வொரு மருத்துவ இனத்திலும் பயன்பாட்டில் இருக்கும் வீட்டு மருத்துவ குறிப்புகளைப் பதிவு செய்யுங்கள். உங்கள் சொந்தங்களில் மற்றும் உங்கள் ஊர்களில் இருக்கும் அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்களை அணுகி அவர்களிடம் இருக்கும் மருத்துவ அறிவுகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் பெண்களிடம் கூறி பழைய பாட்டிமார்களிடமிருந்து கர்ப்பம், குழந்தை பிறப்பு, குழந்தை பராமரிப்பு, அவற்றுக்கான மூலிகைகள் போன்ற விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள், அவற்றைப் பதிவு செய்யுங்கள் என்றேன்.
முன்பு இயற்கை மருத்துவம் செய்தவர்கள், மூலிகை அறிவு, மருத்துவ அறிவு உள்ள பெரியவர்களை அணுகி அவர்களின் அறிவையும் அனுபவங்களையும் பதிவு செய்து புத்தகங்களாக வெளியிடுங்கள். இன்றைய கால கட்டத்திலும் எதிர் காலத்திலும் மிகவும் பயனுள்ளதாக அமையும், உங்கள் இனத்தின் பெருமையும் உலக மக்களுக்குத் தெரியவரும் என்றேன்.
அதற்கு அவர்கள் “அதுக்கு எங்கங்க எங்களுக்கு நேரம் இருக்கு?” எங்கள் பெண்களுக்கு வீட்டு வேலைகளைப் பார்க்கவே நேரம் போதவில்லை இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது? என்றார்கள்.
மருத்துவம் என்பது மனித இனம் இந்த உலகில் வாழும் நாள் வரையில் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான பொக்கிஷம், ஆனால் அதைச் சேகரிக்கவும், ஒன்று திரட்டவும், சேர்த்து வைக்கவும், நேரமில்லை ஆர்வமில்லை என்றால் என்ன வாழ்க்கையை வாழ்கிறீர்கள்? அல்குர்ஆன் கூறுகிறது, எந்த ஒரு இனமும் தானாக முயற்சி செய்து மாறாமல், இறைவன் அவர்களுக்கு எந்த மாற்றத்தையும் தருவதில்லை என்று.
மருத்துவ இன நண்பர்கள் மட்டுமின்றி நாம் ஒவ்வொருவரும் இயற்கை மருந்துகள், மூலிகை மருந்துகள், மற்றும் வீட்டு மருத்துவங்களை அறிந்துகொள்ள வேண்டும், சேகரிக்க வேண்டும், மற்றும் பதிவு செய்ய வேண்டும். அவற்றை ஒன்று திரட்டினால் இன்று வாழும் மனிதர்களுக்கும் எதிர்காலத்தில் வரப்போகும் சந்ததிகளுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.
Leave feedback about this