நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகள். ஒரு விசயத்தை நம் முன்னோர்கள் பின்பற்றினார்கள் என்பதால், சிந்திக்காமல் ஆராயாமல் முழுமையாக அவற்றை ஏற்றுக் கொள்வது தவறு. அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது என்று காரணம் கூறி நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களை முழுமையாக ஒதுக்குவதும் தவறு. அறிவியல், தொழில்நுட்பம், புதுமை, என்று எதையாவது சொன்னால், மேல்நாட்டு அறிஞர்களின் கண்டுபிடிப்பு என்று நம்பிக்கொண்டு, சிந்திக்காமல் ஆராயாமல் கண்மூடித்தனமாக அதனை நம்புவதும் பின்பற்றுவதும் மாபெரும் தவறு.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பது அறிவு.
குறள் எண்:423
மதம், சாதி, மற்றும் நம்பிக்கைகளை பெரும்பாலும் யாரும் விரும்பி தேர்ந்தெடுத்துப் பின்பற்றுவது இல்லை. பெற்றோர்களின் செயல்களை பார்த்துத்தான் பெரும்பாலான பிள்ளைகள் பின்பற்றுகிறார்கள். பெற்றவர்கள் சுய உணர்வோடு கற்றுத்தராமல் இருந்தாலும் தன்னைவிட மூத்தவர்களின் செயல்களைப் பார்த்துப் பின்பற்றுவது குழந்தைகளின் இயல்பாக இருக்கிறது. இவ்வாறு கற்றுக்கொள்ளும் குழந்தைகள் எதனைச் சரி என்று நம்புகிறார்களோ, அதைத் தவிர்த்து மற்றவை அனைத்தும் பொய், தவறு, என்று நம்பத் தொடங்குகிறார்கள்.
இந்த சமுதாயத்தில் நடக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணம், எது சரி எது தவறு என்று மனப்பூர்வமாகச் சிந்திக்கும் பக்குவமும், மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், சக மனிதர்களின் உரிமையைப் பேணும் பக்குவமும் இல்லாமல், தனது கருத்துக்களை மற்றவர்களின் மீது திணிக்க எண்ணுவது. தனது கருத்துக்கள் உண்மை என்று நிரூபிக்க எண்ணுவது, அதற்காக எந்த எல்லைக்கும் வன்முறைக்கும் செல்லும் அறியாமை.
இவ்வாறான தீய குணாதிசயங்களை மனிதர்கள் மாற்றிக்கொண்டு, மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்புக் கொடுக்க தொடங்கினால், இந்த உலகமே அமைதிப் பூங்காவாக இருக்கும்.