நல்லவர்களுக்கு கிடைக்கும் இறைவனின் உதவிகள். நல்லவர்கள் துன்பத்தில் இருக்கும் போது இறைவனின் உதவி கிடைக்குமா என்றால், நிச்சயமாகக் கிடைக்கும். ஆனால் அந்த உதவி நேரடியான உதவியாக இருக்காது. உதாரணத்திற்கு ஒரு நல்லவர் வறுமையில் இருக்கிறார் என்பதற்காக பணம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டாது. பண மூட்டையுடன் எந்தத் தெய்வமும் அவர் வீட்டுக்கு வராது. ஆனால் வறுமையான சூழ்நிலையிலும் எவ்வாறு நிம்மதியாக வாழமுடியும்? எவ்வாறு அந்த சூழ்நிலையைச் சமாளிக்க முடியும்? அதிலிருந்து எவ்வாறு மீண்டு வரமுடியும்? என்று சிந்தனைகளும் எண்ணங்களும் அவர்களின் மனதில் உருவாகிக் கொண்டே இருக்கும். அவர்களை சுற்றிலும் இந்த சூழலில் இருந்து வெளிவருவதற்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் இருந்து கொண்டே இருக்கும். அவர்தான் அவற்றைப் புரிந்து கொண்டு அந்த வழிமுறைகளைப் பின்பற்றி, பயன்படுத்தி, துன்பங்களிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
