நல்லவர் வாழ்விலும் துன்பம் வருவது ஏன்? சிறு வயது முதலாக கனவிலும் யாருக்கும் கெடுதல் செய்யாதவர்கள், யாருக்கும் எந்த வகையிலும் தொந்தரவு கொடுக்காதவர்கள், மனதறிந்து எந்தப் பாவமும் செய்யாதவர்கள், அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்ற நல்ல எண்ணம் உடையவர்கள் கூட சிலவேளைகளில் அவர்களின் வாழ்க்கையில் சில இன்னல்களை அனுபவம் செய்கிறார்கள்; இதற்குக் காரணம் என்ன?
நல்லவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும், அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வேண்டும்; தீயவர்களுக்கு கெட்டது நடக்க வேண்டும், அவர்களின் வாழ்க்கை துன்பகரமானதாக இருக்க வேண்டும்; இதுதான் எல்லோரும் எதிர்பார்ப்பது. காரணம் அனைவரும் தன்னை தானே நல்லவர்கள் என்றும் மற்றவர்கள் ஏதாவது ஒரு வகையில் தீயவர்கள் என்றும் நம்புகிறார்கள். இன்பம் – துன்பம், நல்லவை – தீயவை, புண்ணியம் – பாவம், அனைவருக்கும் சமமானது. நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற எந்த பாகுபாடும் இன்றி அனைவரும் அனைத்தையும் தங்களின் வாழ்நாளில் அனுபவிப்பார்கள்.
இயற்கையின் நியதியால் உண்டாகும் துன்பங்கள்
சிலர் தாங்கள் செய்த தவறுகளுக்குத் தண்டனையாக சில துன்பங்களை அனுபவிப்பார்கள். ஆனால் ஒரு சிலர் எந்தப் பாவமும் செய்யாமல் ஒழுக்கமாக வாழ்ந்தும் பல துன்பங்களை அவர்களின் வாழ் நாட்களில் அனுபவிக்கிறார்கள். இந்த சூழ்நிலையை விளங்கிக்கொள்ள மானையும் புலியையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். மான் எந்த ஒரு உயிரினத்திற்கும் எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது ஆனாலும் மான்கள் தொடர்ச்சியாக புலிகளால் வேட்டையாடப்படுகின்றன. மானுக்கும் புலிக்கும் எந்த வகையான பகையும் கிடையாது, ஆனால் பசி உண்டானால் புலிகள் மான்களை வேட்டையாடுகின்றன. மான்களை புலிகள் வேட்டையாடும் போது கடவுளோ இயற்கையோ வந்து காப்பாற்றுவது கிடையாது. ஆனால் மான்களுக்கு புலிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்ள ஏதுவான உடல்வாகும் புத்திக் கூர்மையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு இயற்கையின் நியதி.
இந்த உலகம் நல்லவர்கள் கெட்டவர்கள் என பாகுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை உள்ளதாகப் படைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பூமியில் நல்லவர்கள் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை தீயவர்கள் வாழ்வதற்கும் இருக்கிறது. நன்மைக்கான பலனும், தீமைக்கான தண்டனையும் நிச்சயமாகக் கிடைக்கும். ஆனால் ஒருவர் நல்லவராக வாழ்கிறார் என்பதற்காக அவருக்குத் தீயவர்களால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்று இந்தப் பூமியில் ஒரு சட்டம் கிடையாது. ஆனால் நல்லவர்கள் தீயவர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ள எல்லா வாய்ப்புகளும் வழங்கப்படும்.
Leave feedback about this