நாகூர் ஆண்டவர் என் வாழ்வில் வந்த கதை. 1997 அல்லது 1998 ஆம் ஆண்டு ஒருநாள் என் தந்தையின் கடையில் நான் கல்லாவில் அமர்ந்திருந்தேன். அப்போது எனக்கு 17 அல்லது 18 வயது இருக்கும். மாலை மணி ஏழு அல்லது எட்டு இருக்கும். ஒரு மலாய்க்காரர் தொழுகைக்குச் சென்று விட்டு, மலாய்க்காரர்கள் அணியும் தொழுகைக்கான ஆடையுடன் எங்கள் கடைக்கு வந்திருந்தார்.
அவர் அவருக்குத் தேவையான உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு கல்லாவில் இருந்த என்னிடம் பேச்சு கொடுத்தார். “இந்தியாவுக்குச் சென்றிருக்கிறாயா?” என்று கேட்டார், “சென்றிருக்கிறேன்” என்று சொன்னேன். திடீரென “நீ நாகூர் தர்காவிற்குச் சென்றிருக்கிறாயா?” என்று கேட்டார். மலாய்க்காரருக்கு நாகூர் தர்காவைப் பற்றி தெரிந்திருப்பது எனக்கு வியப்பைத் தந்தது. நான் சொன்னேன் “தர்காவுக்குச் செல்வது இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான செயல் இஸ்லாமிய மார்க்கத்தில் தர்காவிற்குச் செல்லக்கூடாது” என்று கூறினேன்.
ஏனென்றால் அப்போது நான் இந்தியாவில் ஒரு புகழ் பெற்ற நபரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு அவற்றைப் பின்பற்றி வந்தேன். என் பதிலைக் கேட்ட அந்த மலாய்க்காரர் கோபமடைந்தார். அவர் கேட்டார் “உன் தாத்தா பாட்டி இறந்து விட்டால் அவர்களின் கல்லறைகளுக்குச் செல்லமாட்டாயா? உன் தாத்தா பாட்டியின் கல்லறைக்குச் செல்வது இஸ்லாமிய மார்க்கத்தின்படி குற்றமாகுமா?” என்று கேட்டார்.
“அந்த தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் நபர் தானே நீயும் உன் குடும்பத்தாரும் இஸ்லாமியர்களாக இருப்பதற்கு காரணம்? அவர்கள்தானே இஸ்லாமிய மார்க்கத்தை இந்தியாவுக்குக் கொண்டு சென்றார்கள்? அவர்களின் மூலமாக இஸ்லாத்தைத் தெரிந்து கொண்ட நீங்கள் அவர்களின் கல்லறைகளுக்குச் செல்வது அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை தானே? அது எப்படி குற்றமாகும்?” என்று கூறிவிட்டு சென்று விட்டார். இதற்குப் பின்புதான் ஒரு ஆச்சரியமான நிகழ்வு என் வாழ்க்கையில் நடந்தது.
அந்த மலாய்க்காரர் சென்றுவிட்ட பிறகு நான் கல்லாவில் இருந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். இவர் ஏன் திடீரென அந்த தர்காவைப் பற்றி கேட்கிறார்? அந்த தர்காவில் இருப்பது யார்? இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இருக்கும் அந்தத் தர்காவை இவர் எப்படி அறிந்து கொண்டார்? அந்த தர்காவிற்கு நான் செல்லமாட்டேன் என்று சொன்னதற்கு இவர் ஏன் கோபப்படுகிறார்? அந்த தர்காவில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? அந்தத் தர்காவில் அடங்கியிருக்கும் நபர் அவ்வளவு சிறப்பு வாய்ந்தவரா? என்பதை போன்ற சிந்தனைகள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.
இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் போது நான் எதேச்சையாக கல்லா பெட்டியை திறந்தேன். கல்லாவில் ஒரு புத்தம், புத்தம் புதிய புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தின் தலைப்பு “நாகூர் ஆண்டவர் சரித்திரம்”. அவர் கூறிய அந்த தர்காவின் சரித்திரமாக இருந்தது. யாரும் வாசித்திராத அச்சில் இருந்து எடுக்கப்பட்டது போன்ற திறக்கப்படாமல் புத்தகம் புதிதாக இருந்தது.
அந்த புத்தகத்தைக் கண்டதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என் தந்தையிடமும் தம்பியிடமும் மற்றவர்களிடமும் இந்தப் புத்தகம் யாருடையது என்று கேட்டபோது. அந்தப் புத்தகத்தை பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அந்தப் புத்தகம் எப்படி அங்கு வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த புத்தகத்தை வாசித்துத்தான் நாகூர் தர்கா வரலாற்றையும். நாகூர் ஷாஹுல் ஹமீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாற்றையும் அறிந்துக் கொண்டேன். அதன் பிறகு பல முறை நாகூர் தர்கா சென்றுள்ளேன்.
அந்த மலாய்க்காரர் யார் என்பதும் எனக்கு இன்று வரையில் தெரியாது. அந்த புத்தகம் எப்படி அங்கு வந்தது என்பதும் இன்று வரையில் எனக்குத் தெரியாது. இது தர்கா விளம்பரம் அல்ல. எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன் அவ்வளவுதான். இது போல் பல ஆச்சரியமான அனுபவங்கள் உள்ளன. மற்ற கட்டுரைகளில் பகிர்ந்துக் கொள்கிறேன்.