நடைபாதை பூக்கள் – யாரோ
துப்பிய எச்சிலில் முளைத்து
கிடைத்ததைக் கொண்டு
முட்டி மோதி தள்ளி
வளர்ந்து பூத்து மலர்ந்து
சாலையோரங்களில்
வாடி நிற்கின்றன
சாமி வகுத்த விதியோ
மனிதன் செய்த சாதியோ
தலையில் சூட்ட வேண்டியது
தரையில் மிதிப்படுகிறது
சாமிக்குக் காணிக்கையாக்கவும்
தலையில் சூட்டிக்கொள்ளவும்
மாலையாகக் கோர்த்து மகிழவும்
அலங்கரித்து ரசிக்கவும்
தேவையில்லை அவசியமுமில்லை
பார்வையால் கசக்காமல்
வார்த்தையால் சிதைக்காமல்
செயல்களால் வதைக்காமல்
ஒதுக்கிவைத்துக் கொல்லாமல்
இருந்தால் போதுமானது
சாலையோரச் சாக்கடை
வறண்ட செம்மண் வாடை
இருட்டோடு கலந்து வீசலாம்
இருந்தும் அவற்றுக்கு மனமுண்டு
ஒதுங்கிக் கொள்ளுங்கள்
விருப்பப்பட்டவர்கள்
சூட்டிக்கொள்ளட்டும்
மற்றவர்கள் பாடையின் மீது
தூவி மகிழ வேண்டாம்
எந்தத் தாமரையும் விருப்பப்பட்டு
சேற்றில் பூப்பதில்லையே…
சாலையோரம் பூத்தாலும்
சாக்கடையில் மலர்ந்தாலும்
மலர்கள் வாசனை வீசிடத்
தவறுவதில்லை மறுப்பதில்லை
Leave feedback about this