உடல் என்பது தலையா, முண்டமா, கைகளா, கால்களா? மனம் என்பது சிந்தனையா, பதிவா, புத்தியா, அனைத்தையும் மீறிய ஆற்றலா? இந்த கேள்விகளைப் போன்றது தான் நான் என்பது உடலா, மனமா, உயிரா? என்ற கேள்வியும்.
கைகள், கால்கள், தலை, முண்டம் அனைத்தும் சேர்ந்ததுதானே உடல்? சிந்தனையும், பதிவும், புத்தியும், ஆற்றலும் சேர்ந்தது தானே மனம்? அவற்றைப் போன்றே உடல், மனம், உயிர் இம்மூன்றும் சேர்ந்த உணர்வுதான் நான். நான் என்பது ஒரு உணர்வு நிலை (consciousness). அந்த உணர்வு எந்த நிலையில் செயல்படுகிறது என்பதைக் கொண்டு மனிதனின் புரிதலும் ஆற்றலும் இருக்கும்.
நான் என்பதை உருவகப்படுத்தினால் உடலைத் தவிர வேறு எதையும் உங்களால் காட்ட முடியாது. நான் என்பதை விளக்கத் தொடங்கினால் உங்களின் மனப் பதிவுகளைத் தவிர்த்து உங்களால் விளக்க முடியாது. நான் என்பதை உணரத் தொடங்கினால் உங்களின் எண்ணங்களைத் தவிர்த்து உணர முடியாது.