முயற்சி திருவினையாக்கும்
ஒரு நாட்டை ஆண்டுவந்த அரசர் ஒருவர், தனது அமைச்சரவைக்கு புதிதாக ஒரு அமைச்சரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்காக ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்தார், அதை பொது மக்களிடம் அறிவிப்பும் செய்தார்,
புதிய அமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்காக பல கட்ட தேர்வுகளை அரசர் நடத்தினார், பலர் அந்தத் தேர்வுகளில் கலந்து கொண்டனர். இறுதியில் மூன்று நபர்கள் மட்டும் ஒரே வகையான மதிப்பெண் பெற்றுத் தேர்வாகி இருந்தனர். அவர்களில் யாரை மந்திரியாக தேர்ந்தெடுப்பது என்பதில் அரசருக்குக் குழப்பம் உண்டானது, இறுதியில் ஒரு போட்டியை அறிவித்தார்.
மிகவும் பிரம்மாண்டமான தனது பழைய கோட்டை கதவை எந்தக் கருவியும் இன்றி திறப்பவருக்குத் தான் அமைச்சர் பதவி என்று அறிவித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மூவரும் அதிர்ந்து போய் நின்றார்கள். பத்து யானைகள் சேர்ந்து திறக்க முடியாத இந்தப் பழமையான கோட்டை கதவை யாராலும் திறக்க முடியாது என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தார்கள்.
தேர்வாகியிருந்த அந்த மூன்று போட்டியாளர்களில் ஒருவர் மட்டும் முயற்சி செய்து பார்ப்போம் என்ற எண்ணத்துடன் அந்தக் கோட்டை கதவை முழு பலத்தைக் கொண்டு தன் கரங்களால் தள்ளினார், என்ன ஆச்சரியம் அந்தக் கோட்டை கதவு திறந்து கொண்டது. அறிவு, ஆற்றல், திறமை, அனைத்தும் இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போம் என்று துணிச்சலோடு முயன்ற நபருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது.
எந்த மனிதனுக்கு, எந்த அறிவு இருக்கும்? எந்தத் திறமை இருக்கும்? எது யாரால் செய்ய முடியும்? என்பது யாருக்கும் தெரியாது. முயற்சி செய்து பார்த்தால் மட்டுமே ஒரு மனிதனின் உண்மையான திறமைகள் வெளிப்படும்.
வாழ்க்கையில் சிரமமானது, கடினமானது, நடக்க வாய்ப்பில்லாதது, என்று எண்ணிக்கொண்டு நாம் ஒதுங்கி நிற்கும் பல விசயங்கள் முயற்சி செய்து பார்த்தால் சுலபமாகத்தான் இருக்கும். தூரத்தில் நின்று வேடிக்கைப் பார்ப்பவருக்கு எல்லாம் சிரமம் தான், துணிந்து முயல்பவருக்கே எதுவும் கைகூடும்.
எந்த விசயத்திலும் முயற்சி செய்து தோற்றுப் போகலாம், தப்பில்லை; முயற்சி செய்யாமல் எதிலும் தோற்றிவிடக் கூடாது. முயற்சி செய்துபாருங்கள்.
Leave feedback about this