முஸ்லிம்கள் கட்டாயம் நாய்களை வளர்க்க வேண்டும். முஸ்லிம்கள் நாயை வளர்க்கக் கூடாது என்று அல்குர்ஆனில் எந்த ஒரு வசனமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை; மாறாக அல்குர்ஆன் நாய் வளர்ப்பதை அனுமதிக்கிறது. மனிதர்கள் தான் முஸ்லிம்கள் நாய்கள் வளர்ப்பதைத் தடை செய்கிறார்கள். நாய்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவை போன்ற ஒரு பிம்பம் மக்களிடையே இருப்பதனால், சிலர் நாய்களைத் துன்புறுத்துகிறார்கள், கொல்கிறார்கள். இது மிகப்பெரிய பாவமாகும், இதற்குக் கடுமையான தண்டனை நிச்சயமாக இறைவனிடத்தில் உள்ளது. நாய் வேட்டையாடிக் கொண்டுவரும் உணவைப் பற்றிய பின்வரும் வசனம் அல்குர்ஆனில் உள்ளது.
(நபியே!) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்; உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்;. எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.
(Al-Maaida: 4)
ஹதீஸ்களில் நாய் வளர்ப்பதற்குத் தடை இருப்பதாக கூறுகிறார்கள். அல்குர்ஆன் அனுமதித்த பிறகு எதற்காக ஹதீஸை பின்பற்ற வேண்டும்? அல்குர்ஆனை விடவா ஹதீஸ் உயர்ந்தது?
உலக அரசியலை புரிந்துகொள்ளுங்கள்
முஸ்லிம்களுக்கிடையே நாய்களின் மீது இருக்கும் வெறுப்பைப் பார்த்தால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது; இடைப்பட்ட காலத்தில் ஏதோ ஒரு இயக்கம், அல்லது குழு முஸ்லிம்களை, கொல்வதற்கும், அடிமைப் படுத்துவதற்கும், நாய்கள் தடையாக இருக்கும் என்பதை அறிந்துக் கொண்டு திட்டமிட்டு நாய்களை, ஹராம் நஜீஸ், என்று பரப்பி விட்டிருக்கிறார்கள். அல்குர்ஆனை ஆராய்ச்சி செய்யாத மக்களும், அவற்றை நம்பிக் கொண்டிருக்கிறார்கள், பரப்பிக் கொண்டிருக்கிறார்கள், பின்பற்றுகிறார்கள்.
உலகம் முழுவதும் முஸ்லிம்கள், கொல்லப் படுவதையும், துன்புறுத்தப் படுவதையும், வேதனைப் படுத்தப்படுவதையும், அடிமையாக்கப் படுவதையும், சூறையாடப் படுவதையும், அனுதினமும் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கலாம். அவற்றில் வெளிப்படையாக காட்டப்படுபவை குறைவானவை மட்டுமே, நம் அறிவுக்கு எட்டாமல் இன்னும் அதிகமாக நடக்கலாம்.
சற்று சிந்தித்துப் பாருங்கள், இந்த வேதனைகளை அனுபவிக்கும் போது பாதிக்கப்பட்டவர்களுடன் நாய் இருந்திருந்தால், கொல்லப்பட்ட, ஊனமான, துன்புறுத்தப்பட்ட, மானபங்கம் செய்யப்பட்ட, நபர்களில் பாதி நபர்களாவது காப்பாற்றப் பட்டிருப்பார்கள்; உண்மையா இல்லையா? ஒரு மனிதர் துன்பப்படும்போது, பிற மனிதர்கள் வேண்டுமானால் பயத்தினால் ஒதுங்கி நிற்கலாம், நாய்கள் நிற்குமா? தன் உயிர் இருக்கும் வரையில் எஜமானனைக் காத்து நிற்காதா? அதனால்தான் இஸ்லாமியர்களுக்கு நாய்கள் தடை.
அத்தனை ஹதீஸ்களும் உண்மையானவை அல்ல
நாய்ளை வளர்த்தால் மலக்குகள் (தேவதைகள்) வரமாட்டார்கள், இதுதானே பெரும்பாலானோர் கூறும் காரணமாக இருக்கிறது? அவ்வாறென்றால் நாய்களை வளர்க்காதவர்களின் வீடுகளில் மலக்குகள் வந்து ஆபத்துகளில் உதவுகிறார்களா? அவ்வாறான உதவிகளைப் பெற்றவர்கள் யாராவது உண்டா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அல்லது கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?
நாய்களை வளர்க்காத முஸ்லிம்களின் வீடுகளில் கொள்ளை, கொலை, கற்பழிப்பு, போன்ற கெட்ட விசயங்கள் நடக்காமல் மலக்குகள் தடுக்கிறார்களா? அல்லது யாரையாவது மலக்குகள் வந்து காப்பாற்றி இருக்கிறார்களா? இவ்வாறு நடந்ததாக கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா? ஆனால் நாய்களை வளர்த்திருந்தால், கண்டிப்பாக அவை காப்பாற்ற முயற்சி செய்திருக்கும் அல்லவா? தனக்கு சம்பந்தம் இல்லாத எத்தனையோ நபர்களையும் குழந்தைகளையும் நாய்கள் காப்பாற்றியதாக நீங்கள் நாளிதழ்களில் வாசித்ததில்லையா? கேள்விப்பட்டதில்லையா?
ஹதீஸ்களின் பெயரால் முஸ்லிம்கள் முட்டாள்கள் ஆக்கப் படுகிறார்கள் என்பது எனது கருத்து. நாய்களை வளர்ப்பது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், உங்கள் வீட்டுக்கும், மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இருக்கிறாரா – இல்லையா என்று தெரியாத, வருவாரா – வரமாட்டாரா என்று தெரியாத மலக்குகள், வீட்டில் நாய்களை வளர்த்தால் உள்ளே வரமாட்டார் என்ற வெறும் நம்பிக்கையின் அடிப்படையில், நாய்களை ஒதுக்குவது உங்கள் உடமைக்கும், உயிருக்கும் ஆபத்தாக முடியக்கூடும்.
உங்களை நீங்கள்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், சிரியா, வங்கதேசம், மியான்மர், அவ்வளவு ஏன் நம் பக்கத்து மாநிலங்களில் எத்தனை முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். எத்தனை முஸ்லிம்கள், உடமைகளை இழந்து, உரிமைகளை இழந்து, மானம் இழந்து, அலைகிறார்கள். அவர்களை ஏன் மலக்குகள் வந்து காப்பாற்றவில்லை? அவர்களுக்கு உதவாத மலக்குமார்கள் உங்களுக்கு வந்து உதவுவார்கள் என்று இன்னும் நம்புகிறீர்களா?
இந்த நம்பிக்கை தான் உண்மையான ஈமான் என்று சிலர் வாதிடுவார்கள். இது நம்பிக்கையல்ல, மூட நம்பிக்கை என்கிறேன் நான். உங்களுக்கு உதவிக்கும் பாதுகாப்பிற்கும் இறைவன் நாய்களைப் படைத்து துணைக்கு அனுப்பி விட்டான். அதை வளர்க்காமல் வானத்திலிருந்து உதவி வரும் என்று மேலேயே பார்த்துக் கொண்டிருப்பது உங்கள் தவறுதான்.
மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.
(Ad-Dukhaan: 38)
எல்லாவற்றையும் அப்படியே நம்பாதீர்கள், சிந்தியுங்கள்
அல்குர்ஆனில் பலமுறை ஒலிக்கும் ஒரு வசனம், நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? சிந்திக்கும் சமுதாயமாக மாற மாட்டீர்களா? என்பதுதான். சிந்திக்க சொல்லி அல்குர்ஆன் தூண்டுகிறது, சிந்திக்கக் கூடாது, நபியையும், ஹதீஸையும், அல்குர்ஆனையும், எதிர்த்து கேள்விகள் கேட்கக் கூடாது என்று நமது ஹஜ்ரத்கள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.
நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?
(As-Saaffaat: 155)
வீட்டுக்கு இரண்டு நாய்களை வளர்க்க தொடங்குங்கள்
முஸ்லிம்களே ஒவ்வொருவர் வீட்டிலும் நாட்டு நாய்களை வளர்க்க முயற்சி செய்யுங்கள், குறிப்பாக சமுதாயத்தை விட்டு விலகி தனி வீடுகளில் வசிப்பவர்கள். நாட்டு நாய்கள் மட்டும்தான் விசுவாசமாக யாருக்கும் அஞ்சாமல், தன் உயிரைக் கொடுத்து எஜமானனைப் பாதுகாக்கும். அழகுக்காக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு நாய்களை வாங்குவதும் வளர்ப்பதும் வீண் வேலையாகும்.
அல்குர்ஆனை பின்பற்றுகிறீர்களா? அல்லது மனிதர்களைப் பின்பற்றுகிறீர்களா? முடிவு உங்கள் கையில் தான் உள்ளது. ஒரு வேட்டை நாய் பிடித்து வரும் விலங்கை உண்ணலாம் என்றால், நாய் வளர்க்காமல் அதைச் செய்ய முடியுமா? நாய்களை வளர்க்கக் கூடாது என்றால் இந்த வசனத்தை அல்லாஹ் இறக்கி வைக்க தேவை இல்லையே.
Leave feedback about this