முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் விசயம். பெரும்பான்மையான மனிதர்கள் தங்களின் குறை நிறைகளையும் தாங்கள் செய்யும் தவறுகளையும் உணர்வதில்லை. தங்களின் தவற்றினால் ஒரு விசயம் தவறாக நடந்தாலும், விரும்பத்தகாத சம்பவம் அல்லது விசயம் நடந்தாலும், தன்னை தானே ஆராயாமல், தங்களின் தவற்றை உணர்ந்து கொள்ளாமல் மற்றவரைக் கைகாட்டி தப்பிக்கப் பார்க்கிறார்கள்.
தனது குறை நிறைகளை உணர்ந்து கொள்ளாமல் இருப்பதும், தன்னை மாற்றிக்கொள்ளத் துணிவில்லாமல் இருப்பதும், பெரும்பாலான மனிதர்களை முன்னேற விடாத தடைக்கல்லாக இருக்கின்றன. ஒரு மனிதனின் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதுதான், ஒரு மனிதன் எவ்வாறான வாழ்க்கையை வாழ்கிறான் என்பதையும், எதிர்காலத்தில் அவன் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழவிருக்கின்றன என்பதையும் முடிவு செய்கின்றன. மாற்றத்தை விரும்பும் மனிதர்கள் முதலில் தங்களின் மனம் மாறுவதற்கு அனுமதிக்க வேண்டும், வாழ்க்கையில் உள்ளதை உள்ளவாறு ஏற்றுக் கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
மனித வாழ்க்கை என்பது அனுதினமும் மாறிக்கொண்டிருக்கும் ஓர் இயக்கமாகும். அந்த இயக்கத்திற்கும் மாற்றங்களுக்கும் ஏற்றவாறு மனிதன் தன்னை மாற்றிக் கொண்டு, மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டால் நிச்சயமாக வாழ்க்கையில் பெரிய மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும்.
பத்தாண்டுகளுக்கு முந்தைய உலகம், சிந்தனை, தொழில்நுட்பம், வாழ்க்கைமுறை, என எதுவுமே தற்போது இல்லை. அனைத்தும் மாறிவிட்டன நீங்களும் மாற வேண்டும். உலகிலும் சமுதாயத்திலும் உண்டாகும் மாற்றங்களுக்கு ஏற்ப உங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
பழைய அனுபவங்களையும், அறிவுகளையும், முடிவுகளையும், கொண்டு புதிய விசயங்களை உருவாக்க முடியாது, வாழ்க்கையில் புதிய மாற்றங்களை உருவாக்க முடியாது. வாழ்க்கை என்பது அனுதினமும் மாறிக்கொண்டே இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் மனிதர்கள், கால ஓட்டத்திலும், வாழ்க்கை ஓட்டத்திலும், பழைய சிந்தனைகளிலும், சிக்காமல் நதியாக ஓடி தங்களின் இலக்கை அடைவார்கள்.