முக்காலத்து நிகழ்வுகளும் எவ்வாறு கிடைக்கின்றன? மன ஓர்மை அமையப் பெற்றவர்களுக்கு எவ்வாறு முக்காலத்து நிகழ்வுகளும் தெரிகின்றன? அந்தச் செய்திகள் எவ்வாறு அவர்களை வந்தடைகின்றன? முக்காலத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலைப் பெற்றவர்களுக்கு தொடக்கத்தில் அவர்கள் விரும்பிய செய்திகளை அனைத்தையும் அறிந்துகொள்ள முடியாது.
எதேச்சையாக ஓரிரு செய்திகள் மட்டுமே அவர்களை வந்தடையும். அவர்களின் மனமானது பக்குவமடையத் தொடங்கும் போது, அவர்களுக்கு நன்மை தரக்கூடிய செய்திகளும். அவர்களை எச்சரிக்கும் செய்திகளும் அவர்களை வந்தடையும்.
பின்னர் அவர்களின் குடும்பத்தார்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஏற்படக்கூடிய கெடுதல்கள் எச்சரிக்கைச் செய்திகளாகக் கிடைக்கும்.
பின்னர் அவர்களின் குடும்பத்திலும், உறவிலும் நடக்கவிருக்கும் நல்ல மற்றும் கெட்ட நிகழ்வுகள் முன்னதாகவே கிடைக்கத் தொடங்கும். சில காலத்திற்குப் பின்னர், மற்ற மனிதர்களின் வாழ்விலும், இந்த உலகத்திலும் நடக்கவிருக்கும் நல்ல மற்றும் கெட்ட விசயங்கள் தெரியத் தொடங்கும்.
மனம் முதிர்ச்சி அடையும் போது அவர்களின் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கான காரண காரியங்களும் விளங்கத் தொடங்கும். பின்னர் இப்போது நடக்கும் நிகழ்வுகளுக்கு முற்கால வாழ்கையில் நடந்த நிகழ்வுகளுக்கும் உள்ள தொடர்புகள் கிடைக்கத் தொடங்கும். இப்போது செய்யும் செயல்கள் பிற்காலத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் விளங்கும். இறுதியாக அவர்கள் விரும்பும் காலத்துக்கு மனம் பயணித்து, விரும்பிய காலத்தில் நடந்த, நடக்கும் மற்றும் நடக்கவிருக்கும் விஷயங்களை அறிந்துக் கொள்ளலாம்.