முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். மகாபாரதப் போரை நடத்த முடிவு செய்தவுடன் தர்மரும் துரியோதனனும் கிருஷ்ணர் தனக்குச் சார்பாக போரிட வேண்டும் என்று விரும்பினார்கள். இருவரும் ஆதரவு கேட்கும் நோக்கத்துடன், கிருஷ்ணரை சந்திக்கச் சென்றார்கள். முதலில் துரியோதனன் கிருஷ்ணரின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தபோது, கிருஷ்ணர் உறக்கத்தில் இருந்தார், துரியோதனன் அவரின் தலைப்பக்கமாக அமர்ந்து காத்திருந்தார். சற்று நேரத்தில் தர்மர் அங்கு வந்து சேர்ந்தார், தர்மர் கிருஷ்ணரின் கால் பக்கமாக அமர்ந்து காத்திருந்தார்.
உறக்கத்தில் இருந்து யார் எழுந்து அமர்ந்தாலும் அவரின் முகம் கால்களின் பக்கமாகத் தானே இருக்கும். உறக்கம் களைந்து எழுத்து அமர்ந்த கிருஷ்ணர் தனது கால்களின் பக்கமிருந்த தர்மரைக் கண்டு வந்த விசயம் என்னவென்று கேட்டார். மகாபாரதப் போரில் கிருஷ்ணர் தனக்குச் சார்பாக இருக்க வேண்டும் என்று தர்மர் வேண்டுகோள் வைத்தார். அதற்கு கிருஷ்ணரும் ஒப்புக்கொண்டார்.
அடுத்ததாக அங்கிருந்த துரியோதனனைப் பார்த்து வந்த நோக்கம் என்ன என்று கேட்டார், அவரும் கிருஷ்ணர் போரில் தனக்குச் சார்பாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். தர்மருக்கு வாக்கு கொடுத்துவிட்டேன், அதனால் அவருக்குத்தான் ஆதரவு வழங்க முடியும் என்று கிருஷ்ணர் பதிலளித்தார். ஆனால் துரியோதனன் விடவில்லை, முதலில் நான்தான் வந்தேன், முதலில் வந்தவருக்கே முதல் சலுகை தரவேண்டும் என்று வாதாடினார்.
இறுதியில் இருவருக்கும் பொதுவான ஒரு அறிவிப்பை கிரிஷ்னர் செய்தார். நான் ஒரு பக்கமும் எனது சேனை படைகள் முழுவதும் ஒரு பக்கமும் இருப்போம், யாருக்கு எதுவேண்டும் என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றார். தர்மர் “பரந்தாமா நீ என் பக்கம் இருந்தால் போதும்” என்றார், துரியோதனனோ ஒரு தனி நபரை விடவும் ஒரு பெரும் படை பலமானது அல்லவா என்று எண்ணி கிருஷ்ணரின் படையைத் தேர்ந்தெடுத்தார்.
துரியோதனனின் தீய குணங்களினால் அவருக்கு உதவி செய்யக்கூடாது என்று கிருஷ்ணர் உறங்குவதைப் போன்று பாவனை செய்தார், ஆனால் பின் நீயே தேர்ந்தெடுத்துக்கொள் என்று வாய்ப்பு வழங்கியும் துரியோதனன் கிருஷ்ணரை நிராகரித்தார். தெளிவான முடிவெடுக்கும் திறன் இல்லாதவர்களுக்கு எவ்வளவு சிறப்பான வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் அவற்றைத் தவற விட்டுவிடுவார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
துரியோதனன் கிருஷ்ணரை போருக்கு உதவக்கூடிய ஒரு மனிதராக மட்டுமே பார்த்தார், தர்மரோ முழு போரையும் தலைமை தாங்கி நடத்தக்கூடிய வழிகாட்டியாக, ஒரு சிறந்த ஆளுமையாக, தலைவனாகப் பார்த்தார். பல்லாயிரம் சிப்பாய்களை விடவும், அவர்களை வழிநடத்தக்கூடிய தலைவன் முக்கியத்துவம் வாய்ந்தவன் என்பதை துரியோதனன் உணரவில்லை.
பல்லாயிரம் சிப்பாய்கள் இருந்தாலும் தலைமை சரியாக இல்லையென்றால் படை தோற்றுவிடும் என்பதை தர்மர் உணர்ந்தார். அதனால் பல்லாயிரம் சேனை படைகளை விடுத்து, ஒரு தலைமைத்துவத்தை தேர்ந்தெடுத்தார். ஆயிரம் ஆடுகளை விடவும் ஒரு சிங்கம் தான் தலைமை தாங்கத் தகுதியுடையது. சரியான தலைமைத்துவமே மகாபாரதப் போரில் தர்மரின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது.
எந்த ஒரு காரியத்தையும் பல்வேறு கோணங்களில் சிந்தித்து, பல்வேறு காலக் கட்டங்களைக் கருத்தில் கொண்டு, ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவசரப்படாமல் நன்றாகச் சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுத்தால் அனைத்திலும் வெற்றி பெற முடியும்.