மெர்சல் பேசும் மருத்துவத்தின் அரசியல். தமிழர்கள் இயற்கையாகவே புத்திசாலிகள், பிரபஞ்சத்தின் அறிவும், புரிதலும், ஆற்றலும், தொடர்பும் உடையவர்கள். அவர்களை எவ்வாறு வியாபாரிகள் ஏமாற்றினார்கள்? அவர்களிடம் இருந்த பாரம்பரிய மருத்துவங்களை, அவர்களே வெறுத்து ஒதுக்கும் நிலையை எவ்வாறு உருவாக்கினார்கள்? எவ்வாறு ஆங்கில மருத்துவம் மட்டுமே உலகில் சிறப்பானது என்று தமிழர்களை நம்ப வைத்தார்கள் என்று பலமுறை சிந்தித்திருக்கிறேன், இறுதியில் கண்டுகொண்டேன்.
ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பாக அனைத்து பாரம்பரிய மருத்துவங்களும் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்தன. இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அனைத்து இயற்கை மருத்துவங்களையும் அழிக்கும் வேளையில் இறங்கினார்கள். இயற்கை மருத்துவத்தைப் பற்றிய பயத்தை மக்களிடம் விதைத்தார்கள். ஆங்கிலேயர்களையும் ஆங்கில மருத்துவர்களையும் கடவுளுக்கு நிகராக மக்கள் மனதில் விதைத்தார்கள். இந்தியாவின் பாரம்பரிய மருத்துவர்களை முட்டாள்கள் போலவும், ஏமாற்றுக்காரர்கள் போலவும் சித்தரித்து; மக்களையும் நம்பவைத்தார்கள். மற்றொரு இடத்தில் இயற்கை மருத்துவர்களை மிரட்டுவதும், வரி போடுவதும், உரிமம், சான்றிதழ் போன்று பல விசயங்களைக் காட்டி மிரட்டி அவர்களை மருத்துவ தொழிலில் இருந்து வெளியேற வைத்தார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஏன் நமது பாரம்பரிய மருத்துவங்கள் மீண்டும் எழுச்சி பெறவில்லை? அதற்குக் காரணம் சினிமா! மருத்துவர்களும், மருந்து கம்பெனிகளும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து சினிமா, தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ் போன்ற பொது ஊடகங்களின் மூலமாக மக்களிடம் ஆரோக்கியம், மருத்துவம் மற்றும் மனித உடல் பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்டு சேர்த்தார்கள்.
நான் கூறப்போகும் காட்சியை, பழைய திரைப்படங்களில் நீங்கள் அதிகமாகப் பார்த்திருக்கலாம். ஒரு விபத்து நடந்திருக்கும் ஒரு நபர் அங்கு வந்து “பட்டணத்து பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் அவர்கள் அடிபட்டவரைக் காப்பாற்றி விடுவார்கள்” என்று கூறுவார். ஒரு பெண் பிரசவ வேதனையில் இருப்பார் அல்லது குழந்தை பிறக்கக் கஷ்டப்படுவார் உடனே, நாட்டு மருத்துவர் அல்லது ஒரு பாட்டி வந்து “பட்டணத்து பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் அவர்கள் காப்பாற்றி விடுவார்கள்” என்று கூறுவார்.
ஒருவர் நாட்டு மருத்துவம் பயனளிக்காமல் இறந்துவிடுவார், உடனே இன்னொருவர் சொல்வார். பட்டணத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்பார். பல திரைப்படங்களில் பிரசவத்திலோ, நோய்களினாலோ, விபத்தாலோ ஒருவர் இறக்கும் போது அருகில் இருப்பவரோ அல்லது ஒரு நாட்டு மருத்துவரோ சொல்வார் ஆங்கில மருத்துவரிடம் சென்றிருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று.
இப்படியே… சிறிய நோயா? கொடிய நோயா? விபத்தா? பிரசவ கஷ்டமா? ஆண்மை இல்லையா? எந்தத் தொந்தரவாக இருந்தாலும் “பட்டணத்துப் பெரிய மருத்துவமனைக்கு செல்லுங்கள் அவர்கள் காப்பாற்றி விடுவார்கள்” என்று சினிமாக்களில் காட்டி காட்டி மக்களின் மனதில் பதிய வைத்து விட்டார்கள். மக்களும் போது ஊடகங்களில் வருவதால் அவற்றை உண்மை என்று நம்பி ஆங்கில மருத்துவத்துக்கு அடிமையாகிவிட்டார்கள்.
இவ்வாறு அவர்கள் உருவாக்கிய பிம்பத்தை உடைக்க பல நல்ல உள்ளங்கள் உழைத்து வருகிறார்கள். மக்கள் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்று எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உழைக்கிறார்கள். ஆனால் அந்த நல்ல உள்ளங்களைப் புரிந்துகொள்ளாமல் முட்டாள்கள் என்றும் ஏமாற்றுக்காரர்கள் என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள்.
இந்த ஆங்கில மருத்துவத்தின் பிம்பத்தை உடைத்திருக்கிறது “மெர்சல்” திரைப்படம். பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் சில கேடுகெட்டவர்கள் மருத்துவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது “மெர்சல்”. எந்த சினிமாவை வைத்து நம்மை ஏமாற்றினார்களோ, அதே சினிமாவை வைத்து அதன் பிம்பத்தை உடைக்க முயற்சி செய்திருக்கிறார்கள் “இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் விஜய்”. படத்தைப் பார்த்து கைதட்டி விட்டு மட்டும் வராமல் அதில் சொல்லப்படும் கருத்துக்களைக் கொஞ்சம் மனதில் பதித்து வையுங்கள்.
சுகப்பிரசவம் ஆகக் கூடாது என்பதற்காக கர்ப்பமுற்ற பெண்களுக்கு, இரசாயனங்களை சத்து மருந்து என்று ஏமாற்றி விற்பனை செய்வது. சுகப்பிரசவம் ஆகக்கூடிய பெண்ணுக்கு கொடி சுற்றி உள்ளது, இரத்தம் போதவில்லை, பன்னீர் குடம் உடைந்து விட்டது என்று பொய்களை சொல்லி மிரட்டி அறுவை சிகிச்சை செய்வது.
தோலின் மேல் ஒரு கீறலைப் போட்டு தைத்துவிட்டு அறுவை சிகிச்சை செய்தாகிவிட்டது என்று போய்ச் சொல்லி இலட்சக் கணக்கில் பணம் பறிப்பது. மூச்சுத் திணறல் என்று மருத்துவமனைக்குச் சென்றால் இருதய கோளாறு என்று பொய் சொல்வது. இடுப்பு வலி என்று மருத்துவமனைக்குச் சென்றால் கிட்னி கோளாறு என்று பொய் சொல்லி கிட்னி திருடுவது. இப்படி மருத்துவ மோசடிகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
ஆங்கில மருத்துவம் மட்டுமல்ல எல்லா மருத்துவமும் பணம் செய்யும் தொழிலாக மாறிவிட்டது. உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றிக்கொள்ள ஒரே ஒரு வழிதான் உள்ளது. உங்கள் உடலைப் பற்றிய அடிப்படை அறிவை நீங்கள் பெற்றுக்கொள்வது மட்டும்தான் அது.
என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன், யாரையும் நம்பாதீர்கள். இன்றைய காலகட்டத்துக்கு மிகத் தேவையான மெர்சல் என்ற திரைப்படத்தைத் தந்த இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் விஜய் அவர்களுக்கு எனது நன்றிகள். இந்தப் படத்தில் மருந்து கம்பெனிகளை விட்டு விட்டீர்கள். மருந்து கம்பெனிகளின் அட்டகாசத்தையும் திரைப்படமாக்குங்கள். மெர்சல் 2 வேண்டும்.
Leave feedback about this