மெய்வழிச்சாலை – தமிழகத்தின் ஆன்மீக பூமி, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சமுதாய கட்டமைப்பு.
2016 ஆம் ஆண்டு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் அக்குபஞ்சர் பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்ட போது மெய்வழிச்சாலை கிராமத்தைப் பற்றியும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் கலாச்சாரங்களை பற்றியும் சில விசயங்களை அறிந்து கொண்டேன். அந்த கிராம மக்களின் வாழ்க்கை முறைகளும் பழக்க வழக்கங்களும் எனக்கு புதிதாகவும் ஆச்சரியம் ஊட்டுபவையாகவும் இருந்தன.
அந்த வகுப்பிற்கு பிறகு, அந்த கிராமத்தைச் சென்று காண வேண்டுமென்று எனக்குள் ஆவல் உருவானது. Whatsapp குழுக்கள் மூலமாக மெய்வழிச்சாலை கிராமத்தை அறிந்த சாலை குமரன் மற்றும் சாலை கெளதம் மூலமாக சாலை சேகர் என்பவரை தொடர்புக் கொண்டு, பின் அந்த கிராமத்துக்குச் சென்றேன்.
மெய்வழிச்சாலை கிராமத்தை அடைந்து அங்கு சாலை சேகர் என்பவரை தொடர்பு கொண்டேன். நான் இந்த உலகத்தில் சந்தித்த நல்ல மனிதர்களில் சாலை சேகர் அவர்களும் ஒருவர். அவர் மட்டுமல்லாமல் நான் அங்கு சந்தித்த மனிதர்கள் அனைவரும் மிகவும் நல்லவர்களாகவும் அன்பும் கருணை உள்ளமும் கொண்டவர்களாகவும் இருந்தார்கள்.
மெய்வழிச்சாலை கிராமத்தில் பல மாநிலங்களையும், மொழிகளையும், மதங்களையும், இனங்களையும், சாதிகளையும், சார்ந்த மக்கள் ஒன்றாக வசிக்கிறார்கள். மெய்வழிச்சாலை கிராமத்தில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது, சாதிப் பிரிவுகள் கிடையாது, உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மொழிகளை பேசக்கூடிய மக்கள் இங்கு ஒன்றாக வாழ்கிறார்கள். சாதிகளின் கர்த்தா என்று மரியாதையுடன் அழைக்கப்படும் மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்கள் உருவாக்கிய இந்த கிராமமானது மனிதர்கள் எவ்வாறு இந்த உலகில் வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.
அந்த கிராமத்து ஆண்கள் அனைவரும் தலையில் தலைப்பாகை கட்டியிருக்கிறார்கள். சில சிறுவர்கள் கூட தலைப்பாகையுடன் இருந்தார்கள். தேவாலயத்துக்கு (அங்குள்ள வழிபட்டு தளத்தை தேவாலயம் என்றே அலைகிறார்கள்) செல்லும் போது அனைவரும் ஒரே சீரான வெண்மை அல்லது காவி உடைகளை உடுத்திச் செல்கிறார்கள். தேவாலயத்துக்கு செல்லும் போதும், தேவாலயத்தை சுற்றியும் யாரும் காலணிகளை அணிவதில்லை. அந்த கிராமத்து மக்கள் அனைவரும் சைவ உணவையே உட்கொள்கிறார்கள்.
அந்த கிராமத்தில் ஒரு சில மனிதர்களுடன் பழகும், பேசும் வாய்ப்பு கிடைத்தது அவர்கள் அந்த கிராமத்தை அறிந்துகொண்ட நிகழ்வும், அவர்கள் அங்கு வந்து சேர்ந்த காரணங்களையும் அறிந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் என்னிடம் பழகிய விதமும் அவர்கள் என்னிடம் காட்டிய அன்பும் மிகவும் ஆச்சரியமானதாக இருந்தது. சாலை கௌதம் அவர்களின் தாயார் மிகவும் அன்பாக பழகி எனக்கு மதிய உணவு தந்தார்கள்.
கூலித் தொழிலாளிகளும், செல்வந்தர்களும், எந்த ஒரு ஏற்றத்தாழ்வின்றி, எந்த ஒரு பாகுபாடின்றி, அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்கிறார்கள். இரு நபர்கள் சந்தித்துக் கொள்ளும் போது இரு கைகளையும் காதுவரையில் உயர்த்தி நமஸ்காரம் என்று மரியாதையை செலுத்துகிறார்கள். மனித இனத்துக்கு மெய்வழிச்சாலை ஒரு எடுத்துக்காட்டு மாதிரி கிராமம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
(மெய்வழிச்சாலை வீடுகள்)
அந்த கிராமத்தில் நான் பார்த்து வியந்த விசயங்களில் ஒன்று மெய்வழிச்சாலை கிராமத்தின் எல்லைக்குள் யாரும் ஓடுகளை பயன்படுத்தி வீடுகளை கட்டுவதில்லை. எந்த வீட்டின் உள்ளேயும் கழிவறைகள் இல்லை, பொது கழிவறை ஊர் எல்லைக்கு ஓரத்தில் தனியாக அமைக்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு வீட்டிலும் மின்சாரம் இல்லை, தொலைக்காட்சி பெட்டி, வானொலி பெட்டி போன்ற எந்த பொழுதுபோக்கு விசயங்களும் இல்லை. புதுமையை விரும்பக்கூடிய சில மனிதர்கள் மட்டும் மெய்வழிச்சாலை கிராமத்தை சுற்றி வீடுகளை கட்டிக்கொண்டு குடியிருக்கிறார்கள்.
(பொன்னரங்க தேவாலயம்)
அந்த கிராமத்தின் நடுவில் ஒரு வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது அதை பொன்னரங்க தேவாலயம் என்று அழைக்கிறார்கள். அந்த தேவாலயத்தின் அருகில் தான் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் அடங்கியுள்ளார்கள் (வான்கன்னி விராட்தவத்தில் இருக்கிறார்கள்). அங்கும் எந்த ஒரு ஆரவாரங்களும் அனாச்சாரங்களும் இல்லாமல் அமைதியான வழிபாடுகள் நடந்தன. மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்கள் திருமேனி தாங்கி வாழ்ந்த பொழுது நடத்திய சத்சங்கங்களையும் சொற்பொழிவுகளையும் கிரந்தங்களாக தொகுத்து, அந்த கிராம மக்கள் தினமும் ஓதிவருகிறார்கள். அந்த ஊரில் நடமாடும் போது பல வீடுகளில் இந்த கிரந்தங்கள் வாசிக்கும் ஓசைகள் கேட்டது.
(ஆண்டவர்கள் வான்கன்னி விராட்தவத்தில் இருக்குமிடம்)
இந்த ஊர் மக்களிடம் என்னை மிகவும் கவர்ந்த விசயங்களில் ஒன்று, மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்களின் வழியை பின்பற்றும் மக்கள் மரணிப்பதில்லை என்று ஆனித்தரமாக நம்புகிறார்கள். அந்த மக்களில் யாருக்காவது உயிர் பிரிந்துவிட்டால் அவர்கள் “ஜீவப்பிரயாணம்” அடைந்துவிட்டார்கள் என்றுதான் அழைக்கிறார்கள். அவர்களை அடக்கம் செய்வதை கூட மண் மறைவு என்றுதான் அழைக்கிறார்கள். மெய்வழிச்சாலை ஆண்டவர்களை பின்பற்றும் மக்களின் உடல் இறந்த பின்பும் அழுகி நாற்றம் அடையாது என்று ஆனித்தரமாக நம்புகிறார்கள்.
மனிதர்கள் படிப்பதற்காகவோ, பெயர், புகழ் மற்றும் செல்வங்களை சேர்ப்பதற்காகவோ இந்த பூமிக்கு வரவில்லை மாறாக வாழ்வதற்காக வந்திருக்கிறோம் அதனால் வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, இந்த வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும் என்று நம் முன்னோர்கள் பலர் கூறி சென்றனர்.
சரி, படிப்பது, தொழில் புரிவது, சம்பாதிப்பது, இவற்றை எல்லாம் தாண்டி வாழ்வது என்றால் என்ன? என்ற கேள்வி இருக்கும் அல்லவா? இந்த கேள்விக்கு விடைகாண வேண்டுமென்றால் மெய்வழிச்சாலை கிராமத்தை ஒரு தடவையாவது சென்றுப் பாருங்கள். மெய்வழிச்சாலை கிராமத்தில் அந்த மக்கள் வாழும் வாழ்க்கைதான் இறைவன் மனிதர்களுக்காக கொடுத்த வாழ்க்கை. உலக மாயைகளில் சிக்காமல் அழகான அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
அதிக நேரம் அந்த கிராமத்தில் செலவிடுவதற்கு அல்லது அந்த கிராமத்தில் தங்கி அவர்களின் கலாச்சாரங்களை கற்றுக் கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனாலும் மீண்டும் அங்கு செல்ல வேண்டும் என்ற ஒரு உந்துதல் மட்டும் என் மனதுக்குள் இருந்துக் கொண்டிருக்கிறது.