மெய்ப்பொருள் மற்றும் மெய்யுணர்தல். எது அழியாதோ, எதை அழிக்க முடியாதோ, எது என்றும் நிலைத்திருக்குமோ, அதுதான் மெய்ப்பொருள். அந்த மெய்ப்பொருளை உணர்ந்து கொள்வதுதான் மெய்யுணர்வு. அந்த மெய்யுணர்வால் தோன்றுவதுதான் ஞானம். மனித உடலுக்குள் என்றும் அழியாத ஒரு பொருள் இருக்கிறது அந்த பொருளை உணர்ந்து கொள்வதும் மெய்யுணர்தல் தான்.
என்றும் நிலைத்திருக்கும் இறைவன் முழுமையான மெய்ப்பொருள் என்றால் மனித உடலை இயக்கும் ஆன்மாவும் ஒரு குட்டி மெய்ப்பொருள் தான். இறைவன் ஒரு கடலென்றால், அந்த கடலிலிருந்து ஆவியாகி, மேகமாகி, மழையாகப் பொழியும் ஒரு மழைத்துளிதான் ஆன்மா. மழைத்துளிகள் மண்ணின் மீது தன் விருப்பம் போல் பயணித்தாலும் இறுதியில் கடலையே வந்தடைகின்றன. அதனால் ஒவ்வொரு மழைத்துளியும் ஒரு குட்டி கடல்தான்.
மெய்யை உணர வேண்டுமே ஒழிய அறிந்துகொள்ளக் கூடாது. பிறர் சொல்வதைக் கேட்டு அறிவால் புரிந்து கொள்வது அறிதல், இந்த உலகத்தின் இயக்கத்தைப் புரிந்துகொண்டு மனத்தால் ஆராய்ந்து புரிந்து கொள்வது உணர்தல். அறிதல் வெளியிலிருந்து உண்டாகும், உணர்தல் உள்ளுக்குள் இருந்து உருவாகும்.