மெய்ப்பொருள் என்பது என்ன? மெய்ப்பொருள், மெய்யறிவு, மெய்ஞானம், மெய்யுணர்தல், என்ற வார்த்தைகள் வெவ்வேறு விசயங்களை குறிப்பதைப் போன்று இருந்தாலும் உண்மையில் இவை ஒரே பொருளைத்தான் பல்வேறு வடிவங்களில் கூறுகின்றன. மேலே குறிப்பிட்ட அத்தனை வார்த்தைகளிலும் மெய் என்ற ஒற்றைச் சொல்தான் பிரதானமாக உள்ளது. மெய் என்ற சொல்லுக்கு உண்மை, சாத்தியமானது, அழியாதது, நிலையானது, உடல், இறைவன் என்று பல பொருள்கள் உள்ளன.
மெய் என்பதன் பிரதானப் பொருளாக “அழியாத சத்தியம்” என்று இருக்கும்போது எந்த நேரத்திலும் அழியக்கூடிய நிலையற்ற உடலுக்கு மெய் என்று பெயர் சூட்டக் காரணமென்ன? பொய்யான, எந்த நேரத்திலும் அழியக்கூடிய இந்த உடலுக்கு மெய் என்று பெயர் வரக்காரணம், அழியக்கூடிய இந்த உடலுக்குள் என்றுமே அழியாத மெய் ஒன்று குடி கொண்டிருக்கிறது.
என்றும் நிலைத்திருக்கும் நித்தியச் சீவியான ஆன்மா இந்த உடலை இயக்குகிறது. ஆன்மாவுடன் (உயிர்) இணைந்து இருக்கும் வரையில் மட்டுமே இந்த உடலுக்குப் பெருமை. உயிர் பிரிந்துவிட்டால் செருப்பினும் குறைவான மரியாதை தான் உடலுக்கு மிஞ்சும். மனிதனுக்கு வழங்கப்படும் மரியாதைகள் அனைத்தும் அவன் உடலை இயக்கும் ஆன்மாவையே சாரும். நிலையான ஆன்மா தங்கி நிற்பதனால் உடலுக்கும் மெய்யென்று பெயர் வந்தது.
இந்த உலகில் நாம் பார்க்கக்கூடிய அனைத்தும் அழியக்கூடியவை. இதே உலகில் என்றும் அழியாமல் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய ஒன்று இருக்கிறது. அதைத் தான் மெய்ப்பொருள் என்று ஞானிகள் அலைகிறார்கள்.
அது என்ன? எது எங்குள்ளது? என்பதை அறிந்த்துக் கொள்வது மெய்ஞ்ஞானம். மெய்ஞ்ஞானத்தை அறிய உதவுவது ஆன்மீகம்.