இறைவனும் இயற்கையும் பேதம்
பார்ப்பதில்லை – இந்து, முஸ்லிம்,
கிறித்தவன், பௌத்தன், சமணன்,
நாத்திகன் என எந்தப் பேதமும் இல்லாமல்
பசி, தாகம், தூக்கம் அனைவருக்கும் உண்டு
பிறப்பும் இறப்பும் அனைவருக்கும் சமமே
நோயும், மரணமும், இன்பமும், துன்பமும்
யாருக்கும் சலுகை வழங்குவதில்லை
சூரியன் அனைவரையும் சுடும்
நிலா அனைவரையும் காயும்
மழை அனைவரையும் நனைக்கும்
நிலம் அனைவரையும் தாங்கும்
இந்து, முஸ்லிம், கிறித்தவன், பௌத்தன்,
சமணன், நாத்திகன் எனப் பேதமின்றி
அனைவரும் சமமாக மிதந்தனர்
பிணமாக சுனாமியில்
கோவில், மசூதி, தேவாலயம், புத்தவிகாரம்
என எந்தப் பேதமும் இன்றி
சிதைந்து வீழ்ந்தன மண்ணில்
நிலநடுக்கத்தில்
இறைவனும் இயற்கையும்
பேதம் பார்ப்பதில்லை
சலுகைகள் வழங்குவதில்லை
வெள்ளம் நுழைந்தது இந்து, முஸ்லிம்,
கிறித்தவன், பௌத்தன், சமணன்,
நாத்திகன் அனைவர் வீட்டிலும்
அழையா விருந்தாளியாக
கோயிலின் பூசாரி, மசூதியின் இமாம்
தேவாலயத்தின் ஆயர், புத்தத் துறவி
யாருக்கும் சலுகை இல்லை
இன்பமும், துன்பமும், நோயும்,
மரணமும் அனைவருக்கும் சமமே
அனைவரையும் துப்பாக்கிகள் சுடும்
அருவாள்கள் வெட்டும் விஷம் கொல்லும்
அனைவருக்கும் பிறப்பு முதல்
இறப்பு வரையில் ஒரே நியதிதான்
நீ எதில் உயர்ந்தவன்?
உன் மதம் எதில் உயர்ந்தது?
பயணங்கள் வெவ்வேறானால்
பாதைகள் வெவ்வேறுதானே?
அனைவரும் மண்ணுக்குத்தான்
நிச்சயமாகச் சாகப் போகிறோம்
உயிர் பிரியும் வரையிலாவது
உயிர்ப்பாக இருப்போம்
விலங்குகளைப் பார்த்தாவது
வாழப் பழகிக்கொள்வோம்
அன்பாக இருப்பது மட்டுமே
மனிதன் என்பதற்கு அத்தாட்சி