மதச் சாயத்தில் திருவள்ளுவர். திருவள்ளுவர் எங்கள் மதத்தைச் சார்ந்தவர், எங்கள் இனத்தைச் சார்ந்தவர், எங்கள் ஜாதியைச் சார்ந்தவர், என்று புலம்பிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு கேள்வி; நீங்கள் என்றைக்காவது திருக்குறளை முழுமையாக வாசித்திருக்கிறீர்களா? திருக்குறள் காட்டும் வழியில் நடக்கிறீர்களா? ஒரு மனிதர் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது, பிற மனிதர்கள் இவர் என், மச்சான், மாமா, சித்தப்பா, பெரியப்பா, என்று உறவு கொண்டாடுவது இயல்பாக நடப்பது தான்.
திருவள்ளுவர் ஒரு இந்து, கிறிஸ்தவர், பௌத்தர், சமணர், இஸ்லாமியர், என்று ஆளாளுக்கு சாட்சி கூறுகிறீர்கள். உங்களது சாட்சி உண்மையானதாக இருந்தால் திருவள்ளுவர் திருக்குறளில் கூறியதைப் போன்று உங்கள் வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டீர்களா? எல்லா மனிதர்களுடனும் ஜாதி, மத, இன, வேறுபாடுகள் இல்லாமல் பழகுகிறீர்கள்? மாமிசம் உண்பது நிறுத்திவிட்டீர்களா? திருவள்ளுவர் கூறும் அறத்தொடு உங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டீர்களா?
திருக்குறள் கூறும் அறங்கள் பிற வேதங்களிலும் பிரதிபலிப்பதற்குக் காரணம், உலக அறம் என்பது ஒன்றுதான்; அதனை திருவள்ளுவர் அவர் மொழியில் கூறினார், வேத நூல்கள் அவை உருவான இனத்திற்கும் மொழிக்கும் ஏற்ப கூறுகின்றன. கற்பனைக் கதைகளும், கதாபாத்திரங்களும், அச்சுறுத்தும் வேலைகளும், மிரட்டல்களும், இல்லாமல் வெறும் அறத்தை மட்டுமே பேசும் திருக்குறள் இந்த உலகின் மிக உயரிய வேதமாகும்.
திருக்குறள் சத்தியமான உண்மைகளைப் பேசுகிறது என்ற தெளிவும் அறிவும் உங்களுக்கு வந்து விட்டால்; இதுவரையில் நீங்கள் நம்பிக்கொண்டிருந்த கற்பனைகளையும் மூடநம்பிக்கைகளையும் விட்டுவிட்டு திருக்குறளில் பின்பற்றி நடப்பது தான் ஒரு தெளிவான மனிதனுக்கு அடையாளம். அதை விட்டுவிட்டு உங்கள் கற்பனைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கு ஏற்ப திருக்குறளை வளைத்து உங்கள் வேதங்களுடன் இணைத்துப் பேசுவது தவறு. அது பேதமையின் அயோக்கியத்தனத்தின் அடையாளமாகும்.