மருத்துவம்

மருத்துவம் செய்யும் வழிமுறைகள்

மருத்துவம் செய்யும் வழிமுறைகள். இந்த மருத்துவம் செய்யுங்கள், அந்த மருத்துவம் செய்யாதீர்கள் என்று பரிந்துரைக்க எனக்கு விருப்பமில்லை. உங்கள் உடல், உங்கள் நோய், உங்கள் பணம், உங்கள் விருப்பம். ஆனால் மருத்துவம் செய்யும் வழிமுறைகளை மட்டும் விளக்குகிறேன். மருத்துவரைக் காணச் சென்றால்…

1. உங்களுக்கு உருவாகியிருக்கும் தொந்தரவுகளின் மூல காரணத்தைக் கேளுங்கள். குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதைப் போன்று, தொந்தரவுகளுக்கு பெயர்களை மட்டுமே சூட்டி அனுப்பிவிடுவார்கள், ஏமாந்துவிடாதீர்கள். நோய் பற்றிய தெளிவான விளக்கம் கேளுங்கள். அந்த நோய் உருவாக காரணம் கேளுங்கள், கூறவில்லை என்றால் அவரிடம் மருத்துவம் செய்யாதீர்கள், கிளம்பிவிடுங்கள்.

2. உங்கள் தொந்தரவுகளைத் தவிர்க்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். இனிமேல் அந்த தொந்தரவு உண்டாகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று கேளுங்கள்.

3. அவர்கள் கொடுக்கும் மருந்து / சிகிச்சை என்ன செய்யும், எவ்வாறு நோய்களைக் குணப்படுத்த உதவும் என்று கேளுங்கள்.

4. அவர்கள் கொடுக்கும் மருந்துகளின் / சிகிச்சையின் பக்கவிளைவுகளை தெளிவாக கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

5. அனைத்துக்கும் மேலாக அந்த மருத்துவர் எவ்வாறு நடந்துகொள்கிறார், எவ்வாறு பேசுகிறார் என்பதை கவனியுங்கள். உங்களை பயமுறுத்தும் நோக்கத்துடனோ, மரண பயத்தை அல்லது நோய் பயத்தை உருவாக்கும் பாணியில் பேசினால், பேச்சை நிறுத்திவிட்டு கிளம்பி விடுங்கள்.

6. நோயாளிகளுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுப்பவர் மட்டுமே உண்மையான மருத்துவர். பயத்தை உருவாக்குபவன் ஏமாற்றுக்காரன்.

7. அந்த மருத்துவர் மனத் தைரியத்தைக் கொடுத்தால், அவர்கள் கொடுக்கும் மருந்து உடலின் கழிவுகளை வெளியேற்றும் என்றால், உடலுக்குத் தெம்பைக் கொடுக்கும் என்றால், அவர் கொடுக்கும் மருந்து உடலுக்குத் தீங்கு விளைவிக்காது என்றால், தொடர்ந்து வைத்தியம் செய்யுங்கள். இல்லையேல், வேறு நல்ல மருத்துவரை / மருத்துவத்தை நாடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X