மரணத்தின் நோக்கம் என்ன? இந்த உலகில் மரணமடையாதவர்கள் எவருமில்லை என்பதும், அனைவரையும் மரணம் நிச்சயமாக அடைந்தே தீரும் என்பதும் அனைவருக்கும் தெரியும். நமக்கு முன்னோரும் போய்விட்டார்கள், நமக்கு பின்னோரும் வந்து விடுவார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் யாரும் மரணமடைய விரும்புவதில்லை.
மரணத்தை பற்றிய ஒரு மாயையும், பயமும் அனைவரிடமும் உண்டு. மரணம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் ஒரு வகையான அச்ச உணர்வு பலரை கவ்விக் கொள்கிறது. அதுவும் ஒரு மருத்துவர் வாயிலிருந்து மரணம் என்ற வார்த்தை வெளிவரும் போது கடவுளே சொல்லிவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு உண்டாகிறது. எமன் நம் முன்னே நின்றுக் கொண்டு வா வா என்று அழைப்பதைப் போன்ற ஒரு மாயை பலருக்கு உருவாகிவிடுகிறது.
குறள் 339
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி, விழிப்பது போலும் பிறப்பு.
திருவள்ளுவர் மிக அழகாக கூறுகிறார். ஒருவன் காலையில் விழித்து எழுவதைப் போன்றது பிறப்பு, அவனே இரவு மீண்டும் உறங்கச் செல்வதைப் போன்றது மரணம். மரணத்தை ஏன் உறக்கத்தோடு தொடர்புபடுத்திக் கூறுகிறார் என்றால், நாம் ஒரு முறை மட்டுமே உறங்குவதில்லை, அனுதினமும் உறங்குகிறோம் மறுநாள் மீண்டும் எழுகிறோம். விழித்தெழும் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உறங்கச் செல்வார்கள்.
அந்த சுழற்சியைப் போன்றே பிறந்த அனைவரும் ஒரு காலத் தவணையில் மரணமடைவார்கள். அவர்கள் ஒரு காலத் தவணைக்குப் பிறகு மீண்டும் பிறந்து வருவார்கள். மற்றுமொரு குறளில் இப்படிக் கூறுகிறார்.
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே, உடம்பொடு உயிரிடை நட்பு.
குறள் 338
உடலுக்கும், உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும், பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவை போன்றதுதான் என்கிறார். ஒரு முட்டை முழுமையாக வளர்ச்சி அடையும் போது, அது குஞ்சாக வெளிவருகிறது. அதைப் போன்றே மனித உயிரானது தனக்கான பயிற்சிக் காலத்தில் முதிர்ச்சி பெறும்போது, அது மேன்மையான அடுத்த பிறப்புக்குச் செல்வதற்காக தற்போதைய உடலை விட்டுப் பிரிகிறது. முட்டை ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தால் தான் அதனால் பறவையாக பறக்க முடியும். அதைப்போலவே உடம்பெனும் இந்தக் கூட்டை விட்டு வெளியில் பறந்தால் தான், அந்த ஆன்மா அடுத்த மேன்மையான வாழ்க்கையை அனுபவம் செய்ய முடியும்.
ஆகையால் மரணம் என்பது பயப்பட வேண்டிய விசயமோ, கொடுமையான விசயமோ அல்ல. மாறாக மரணம் என்பது மனிதனின் உயிர் அடுத்த கட்டத்துக்குச் செல்லும் வளர்ச்சி அல்லது பழைய நோய்வாய்ப்பட்ட, பலவீனமான உடலைத் துறந்து, புதிய ஆரோக்கியமான உடலை அடையும் அழகான நகர்வு.
உடல் தளர்ந்து விழுவதற்கு முன்பாக, முதுமை முடிவைத் தருவதற்கு முன்பாக, எமன் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக, நீங்களாக மனமுவந்து உயிரைத் துறக்க தயாராக இருங்கள். வாழ்க்கை எளிமையானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்கும். மரணம் அமைதியானதாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்.