வாழ்க்கை

மரணம் ஒரு அழகான மகிழ்ச்சியான விசயம்

person smiling at the camera

மரணம் ஒரு அழகான மகிழ்ச்சியான விசயம். மனித உடலை 120 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த முடியும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். 100 – 120 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது, ஆனால் குறுகிய காலம் வாழ்ந்தாலும் ஆரோக்கியமாக, திடகாத்திரமாக, மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ்ந்து, நிம்மதியாக மன நிறைவுடன் மரணிக்க வேண்டும். நிறைவேறாத ஆசைகளுடனும், ஏக்கங்களுடனும், பயத்துடனும் உயிர் பிரியக்கூடாது. மரணம் என்பது பயப்பட வேண்டிய ஒன்று அல்ல.

மரணம் என்பது ஒரு அழகான மகிழ்ச்சியான விசயம். “பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து”, என்று மாணிக்கவாசகர் பாடும் அந்த எல்லாம் வல்ல இறைவனை நாம் சந்திக்கக் கூடிய ஒரு வாய்ப்பு. இந்த உடல் அனுபவிக்கும் அனைத்து வகையான தொந்தரவுகளிலிருந்து, உபாதைகளிலிருந்து, நோய்களிலிருந்தும் விடுதலை அடையக் கூடிய ஒரு வாய்ப்பு. உலகியல் வேதனைகள் மற்றும் துன்பங்களிலிருந்தும் விடுபட ஒரு வாய்ப்பு. அந்த விடுதலையை (மரணத்தைப்) பார்த்து ஏன் பயப்பட வேண்டும்?

இப்போது இருக்கும் வீட்டை விட ஒரு நல்ல விசாலமான அனைத்து வசதிகளும் நிறைந்த வீட்டைக் கொடுத்தால் வேண்டாமென்று சொல்வீர்களா? மரணம் என்பதும் அப்படிதான், ஊனமுற்ற, நோய்வாய்ப்பட்ட, முதுமை அடைந்த உடலை விட்டுவிட்டு வேறு ஒரு புதிய ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வாய்ப்பு. இது சந்தோசப்பட வேண்டிய விசயம் தானே?

எல்லாம் வல்ல இறைவனை, நம்மைப் படைத்த பரம்பொருளை அடைவது தான் மனித பிறப்பின் நோக்கம் என்று அனைத்து சமயங்களும் சொல்கின்றன. மரணத்தை அடையாமல் எப்படி அந்த பரம்பொருளை அடைய முடியும்? மனிதன் மரணத்தை நினைத்து பயப்படுவதற்குக் காரணம் அவனது மனம். அந்த மனதில் அவன் சேர்த்து வைத்திருக்கும் ஆசைகளும் இச்சைகளும். அந்த இச்சைகளை அடைய முடியாமல் அல்லது அடையாமல் இறந்து விடுவோமோ என்ற பயத்தில் தான் மனிதர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

வாழ்க்கை ஒருமுறைதான் என்று நம்புவதால் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான மனிதர்கள் எண்ணுகிறார்கள். வழக்கை முடிவற்றது என்பது புரியவரும் போதும், மரணம் என்பது புதிய வாழ்க்கைக்கான தொடக்கம் என்பதும் புரியும் போதும், மனம் அமைதிபெறும் வாழ்க்கையும் மரணமும் ஒன்றாகத் தெரியும்.

    • August 22, 2024 3:40 pm

    நன்றி ஐயா

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X