மனிதர்களின் துன்பங்கள். பெரும்பாலும் எல்லா மனிதர்களும் இன்ப துன்பங்களை அனுபவம் செய்கிறார்கள். நபருக்கு நபர் சிறிய வேற்றுமைகள் இருந்தாலும் துன்பத்தை அனுபவம் செய்யாத நபர் என்று யாரும் இருக்க மாட்டார். பல வகையான கஷ்ட நஷ்டங்களை மனிதர்கள் அனுபவம் செய்தாலும் அவற்றை எண்ணி வேதனைப்பட வேண்டிய அவசியம் கிடையாது.
மனதைச் சற்று அமைதியாக வைத்துக்கொண்டு இந்த தடைகளைத் தாண்டுவதற்கான வழி என்ன என்று சிந்தனை செய்து, குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் கலந்தாலோசனை செய்தால் அனைத்து வகையான துன்பங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.
மனிதர்கள் அனுபவம் செய்யும் வேதனை என்பது வாழ்க்கையில் உண்டாகும் ஏற்ற தாழ்வுகளை எண்ணி அஞ்சுவதால் உருவாகும் உணர்வாகும். மனிதர்களுக்கு உண்டாகும் துன்பம் என்பது தனது பற்றாக்குறையைச் சிந்திப்பதனால் உண்டாகும் வேதனையாகும். கஷ்டம் என்பது தனது இயலாமையும், தன்னிடம் இல்லாதவற்றையும் எண்ணுவதால் உருவாகும் வேதனையாகும்.
துயரம் என்பது பிரிந்துவிட்ட விட்ட பொருளையோ நபரையோ எண்ணி அதனால் உண்டாகும் வேதனையாகும். பிரச்சனை என்பது வெளி நபர்களால் உண்டாக்கும் தொந்தரவுகளால் உண்டாகும் வேதனையாகும். விரக்தி என்பது இல்லாமை மற்றும் இயலாமையால் உண்டாகும் வேதனையாகும். அவலம் என்பது இந்த பூமியில் வாழ்வதற்கு வழியில்லை என்ற எண்ணத்தினால் உண்டாகும் வேதனையாகும்.
இந்த வாழ்க்கையில் மனிதர்களுக்கு எந்த வகையான துன்பமும் ஏற்றத்தாழ்வும் உருவாகலாம். அவற்றைப் புரிந்து கொண்டு வாழும் மனிதர்கள் எளிதாக அவற்றைக் கடந்து செல்கிறார்கள், அவற்றிலிருந்து வெளிவருகிறார்கள். அவற்றைக் கண்டு அஞ்சி ஓட நினைக்கும் மனிதர்கள் தான் வேதனைகளை அனுபவம் செய்கிறார்கள். வாழ்க்கையில் தனக்கு உண்டான பிரச்சனைகளைச் சிந்தித்து, ஆராய்ந்து, தெளிவாகப் புரிந்துகொள்ளும் மனிதர்கள் எளிதாக அவற்றிலிருந்து வெளிவரும் வழிமுறையைக் கண்டுகொள்கிறார்கள்.
வாழ்க்கையில் தனக்கு வேதனையை உண்டாக்கிய அத்தனை விசயங்களையும் மாற்றி அமைத்துக் கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
Leave feedback about this