மனிதர்களின் தனித்தன்மையான குணங்கள். இந்த உலகில் எல்லா மனிதர்களும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சிந்தனைத் திறன், இயல்பு, மற்றும் வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இருக்கும். ஒரு குடும்பத்தில் பத்து நபர்கள் இருந்தாலும் அவர்கள் பத்து வெவ்வேறு தன்மைகளுடன் பிறந்திருப்பார்கள். ஒரு ஊரில் ஆயிரம் நபர்கள் இருந்தால், ஆயிரம் வகையான தன்மைகளுடன் இருப்பார்கள். அவ்வளவு ஏன் இந்த உலகில் வாழும் அத்தனை கோடி மனிதர்களும், அத்தனை கோடி தன்மைகளுடன் படைக்கப்பட்ட மனிதர்களே.
மனிதர்கள் பெரும்பாலும் தன்னைப் போலவே மற்றவர்களும் இருப்பார்கள் என்று எண்ணுகிறார்கள். நல்லவர்கள் அனைவரையும் நல்லவர்கள் என்று நம்பி ஏமாறுகிறார்கள். அப்பாவிகள் அனைவரையும் அப்பாவிகள் என்று நம்பி ஏமாறுகிறார்கள். கெட்டவர்கள் அனைவரையும் கெட்டவர்கள் என்று நினைத்து சந்தேகம் கொள்கிறார்கள். பொறாமை குணம் உள்ளவர்கள் அனைவரும் நம்மைப் பார்த்துப் பொறாமைப் படுவார்கள் என்று எண்ணுவார்கள்.
மனிதர்கள், தன்னிடம் இருக்கும் இயல்பைக் கொண்டு பிற மனிதர்களையும் எடைப்போடுகிறார்கள். தன்னைப் போலவே மற்றவர்களும் இருப்பார்கள், அல்லது இருக்க வேண்டும் என்று நம்பும்போது ஏமாற்றமும், மனக்குழப்பமும், மனச் சமமின்மையும், மன வேதனையும், உருவாகக் காரணமாகிறது. உலகில் எந்த இரு மனிதர்களும் ஒரே மாதிரியான இயல்புடன் இருக்கமாட்டார்கள். சிலர் சில விசயங்களில் சற்று ஒத்துப் போகலாமே ஒழிய நூற்றுக்கு நூறு சமத் தன்மையுடைய இரண்டு மனிதர்கள் இந்த உலகில் எந்த மூலையிலும் இருக்க மாட்டார்கள்.