மனிதர்களின் மனம் பார்க்கும் விதம். மனிதர்களின் மனம் கண்களின் மூலமாகப் பார்க்கும் பொழுது 180 டிகிரியில் ஒரு கேமராவைப் போன்று செயல்படுகிறது. கண்களின் பார்க்கும் எல்லைக்குள் இருக்கும் அத்தனை விசயங்களையும் பதிவு செய்து கொள்கிறது. அதே நேரத்தில் தன்னை சுற்றி இருக்கும் அசைவுகளையும், உணர்ச்சிகளையும் பதிவு செய்து கொள்கிறது.
உதாரணத்திற்கு, ஒருவர் கோயிலுக்குச் சென்றார் என்றால், அவர் அங்கு இருக்கும் மூலவரை மட்டுமே கவனித்துக் கொண்டிருப்பார். ஆனால் அவர் மனமோ அந்த மூலவரைச் சுற்றி இருக்கும் சிறு சிறு தெய்வங்களின் சிலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கும், பதிவு செய்துகொள்ளும். கோயிலில் அவரை சுற்றி இருக்கும் மனிதர்களையும் அங்கு ஒலிக்கும் ஓசைகளையும், அங்கு இருக்கும் சூழ்நிலையையும், சீதோஷ்ண நிலையையும் பதிவு செய்து கொண்டிருக்கும்.
ஒருவர் சினிமாவுக்குச் சென்றால் அவரின் பார்வை முழுவதும் கதாநாயகன் மீதோ, கதாநாயகியின் மீதோ, அல்லது வில்லன் மீதோ, இருக்கும். ஆனால் அவரின் மனமோ கதாநாயகன் கதாநாயகியின் பின்னால் வரும், சிறு சிறு நடிகர்களையும், அந்த படத்தில் தோன்றும் அத்தனை காட்சிகளையும் பதிவு செய்து கொண்டிருக்கும். வில்லன் வரும்போது வில்லனைச் சுற்றி இருக்கும் அடியாட்களையும், அவர்கள் வரும் வாகனம் முதல் அங்கு இருக்கும் அலங்காரங்கள் வரையில் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருக்கும்.
நம் முன்னே இருக்கும் அனைத்தையும் மனம் பதிவு செய்துகொள்வதால், நாம் எவற்றையெல்லாம் பார்க்கிறோம், கவனிக்கிறோம், என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதைப் போன்றே நம் பிள்ளைகள் பார்க்கும் காட்சிகளையும், சினிமாக்களையும், கார்டூன்களையும் கவனிக்க வேண்டும். எவற்றை நாமும் நம் பிள்ளைகளும் பார்க்கலாம், எவற்றையெல்லாம் பார்க்கக்கூடாது என்பதில் தெளிவும் எச்சரிக்கையும் இருக்க வேண்டும்.
Leave feedback about this