குண்டலினி சக்தி என்பது மனித உடலின் இயக்கத்துக்கு உதவக்கூடிய ஒரு சூட்சம சக்தியாகும். இது ஒரு மாய வித்தையோ, மந்திர சக்தியோ அல்ல. உடலுக்கு தேவையான சுவாசக் காற்றைப் போன்று குண்டலினியும் மனித உடலின் இயக்க சக்திகளில் ஒன்று. குண்டலினியின் இருப்பிடம் மூலாதார சக்கரமாகும், மனித உடலின் முதுகெலும்பின் கீழே, ஆக கடைசி எலும்பு பகுதியில் சுருண்டு படுத்திருக்கும் ஒரு பாம்பின் வடிவில் குண்டலினி அமைந்திருக்கும்.
மருத்துவம் மற்றும் ஆன்மீகத்தின் பல இடங்களில் பாம்பு சின்னத்தைப் பயன்படுத்துவதை நீங்கள் பார்த்திருக்கலாம். உடல் மற்றும் மனதின் இயக்க சக்தியை (குண்டலினியை) குறிப்புக் காட்டவே பாம்பு சின்னத்தைப் பயன்படுத்துகிறார்கள். நிலையாக அசையாமல் இருக்கும் பாம்பை அறிந்துக் கொள்வது மிகவும் கடினமாகும். உருவமும் தன்மைகளும் ஒத்துப் போவதனால் குண்டலினியைக் குறிக்க பாம்பின் வடிவத்தைப் பயன்படுத்தினார்கள் நம் முன்னோர்கள்.
இந்த ஆற்றலின் ஆண் மற்றும் பெண் தன்மைகளை குறிப்பதற்காகவே சில வேளைகளில் இரண்டு பாம்புகளைக் குறியீடாக பயன்படுத்துகிறார்கள். இந்த ஆற்றல் மனிதனின் வாழ்க்கையில் அனைத்து சூழ்நிலைகளிலும், அனைத்து இடங்களிலும் செயல்புரிகிறது. குண்டலினி ஆற்றல் எவ்வளவு வீரியத்துடன் இயங்குகிறதா மனிதர்களின் வாழ்க்கை அவ்வளவு உயர்வாக இருக்கும்.
(குண்டலினி ஆற்றலின் சின்னம்)
ஆழமாக வாசிக்கும்போதோ, சிந்திக்கும்போதோ, தியானத்தில் இருக்கும்போதோ, தொழுகை, வழிபாடுகள் நடத்தும்போதோ உங்களின் முதுகெலும்பின் வால் பகுதியை மென்மையாக தொட்டுப்பார்த்தால், அது உஷ்ணமாக இருப்பதை உணரலாம். காரணம் இவ்வாறான செயல்களை செய்யும் போது, மூலாதாரம் வீரியத்துடன் செயல்படுகிறது.
சிலருக்கு அதிக நேரம் தியானம் செய்தாலோ, மந்திரங்களை ஜெபித்தாலோ, தொழுகை செய்தாலோ, யோகா செய்தாலோ, வழிபாடுகள் செய்தாலோ, சிந்தனை செய்தாலோ மலச்சிக்கல் அல்லது தலைவலி உண்டாகலாம். இதற்கும் காரணம் மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினிதான்.
குண்டலினி அதிகப்படியான உஷ்ணம் அடையும்போது, அதன் உஷ்ணம் உடலில் பரவி, தலைவலியோ, மலச்சிக்கலோ உண்டாகலாம். குண்டலினி அதிகப்படியான உஷ்ணத்துடன் மற்ற சக்ராக்களுக்கு பரவும்போது மற்ற உறுப்புகளின் உஷ்ணமும் அதிகரிக்கலாம். தியானம் செய்வதன் முக்கிய நோக்கம் குண்டலினி ஆற்றலை சமப்படுத்துவதும் கட்டுப்படுத்துவதும் ஆகும்.