பொது

மனிதர்களை மிரட்டும் பேய் பிசாசுகள்

மனிதர்களை மிரட்டும் பேய் பிசாசுகள். பேய் பிசாசு போன்ற அமானுஷ்யங்களைப் பார்த்ததாக கூறும் போது பெரும்பாலான மனிதர்கள் கூறுவது என்னவென்றால்; நான் ஒரு வெள்ளை உருவத்தைப் பார்த்தேன், ஒரு கருப்பு உருவத்தைப் பார்த்தேன், வெள்ளை சேலைக் கட்டிய பெண்ணைப் பார்த்தேன், வெண்மை ஆடை உடுத்திய பெண்ணைப் பார்த்தேன், புகையைப் போன்ற ஒன்று கடந்து செல்வதைப் பார்த்தேன், நெருப்பு பந்தைப் பார்த்தேன், இவ்வாறான பல அனுபவங்களைப் பற்றிக் கூறுவார்கள். இவர்கள் பார்த்தவை உண்மையில் என்ன என்பதைப் பற்றி பிறகு பார்ப்போம்.

இந்தியர்களைப் பொறுத்தவரையில் பேய்கள் என்பவை வெள்ளை ஆடையோ, புடவையோ கட்டிக்கொண்டு, கால்கள் இல்லாமல் காற்றில் மிதந்து அலையும் ஒரு அமானுஷ்யம். சீன நாட்டவர்களின் நம்பிக்கைகள் எவ்வாறு இருக்கின்றன என்றால், சிவப்பு அல்லது கருப்பு வண்ண ஆடைகளுடன் பேய்கள் உலாவும் என்று நம்புகிறார்கள். சில சீனர்கள் பேய்களால் நடக்க முடியாது, அவை குதித்துக் குதித்துத் தான் வரும் என்று நம்புகிறார்கள்.

மலாய்க்காரர்களோ பேய்கள் என்பவை, வெள்ளை நிற ஆடை உடுத்தியிருக்கும், சில பெண் பேய்கள் கையில் குழந்தை வைத்திருக்கும், சில பேய்கள் தலையில்லாமல் இருக்கும், சில பேய்கள் சிறு குழந்தை உருவில் இருக்கும் என்று நம்புகிறார்கள். ஆங்கிலேயர்களும் பேய் என்பது வெள்ளை ஆடை உடுத்தி இருக்கும், திருமணத்திற்குப் பயன்படுத்தக் கூடிய கவுன் போன்ற ஓர் ஆடையுடன் வலம்வரும் அல்லது வெள்ளைக் கோட்டுச் சூட்டுடன் வரும் என்று நம்புகிறார்கள்.

சரி! நான் ஒரு சந்தேகத்தைக் கேட்கிறேன், புடவை கட்டிய ஒரு பெண் பேயை ஏன் ஆங்கிலேயர்கள் பார்ப்பதில்லை? ஏன் சீனர்கள் பார்ப்பதில்லை? அதைப் போலவே குதித்துக் குதித்து வரும் சீன பேயை ஏன் இந்தியர்கள் பார்ப்பதில்லை? ஆங்கிலேயர்கள் ஏன் பார்ப்பதில்லை? மலாய்க்காரர்கள் பார்க்கும் பேய்கள் ஏன் மற்ற இனத்தவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை?

உண்மையைச் சொல்வதானால், ஒரு இனத்தவர் பேயின் உருவம் என்று நம்பிக் கொண்டிருக்கும் உருவத்தை, மற்ற இனத்தைச் சேர்ந்த எவரும் பார்ப்பதில்லை, பார்த்ததாக யாரும் கூறுவதுமில்லை. ஒரு இனத்தில் எவற்றைப் பேய்களின் உருவம் என்று அதன் மக்கள் நம்புகிறார்களோ, அந்த உருவத்தில் மட்டுமே பேய்களை அதன் மக்கள் பார்க்கிறார்கள். இதற்குக் காரணம் 95% பேய்கள் என்பவை மனிதர்கள் தாங்களாகவே கற்பனை செய்து கொண்ட உருவங்கள் மட்டுமே.

பேய்களைப் பற்றி ஒருவருடைய மனதில் என்னென்ன நம்பிக்கைகள் இருக்கின்றனவோ, எவற்றைப் பேய்களின் உருவம் என்று அவர் நம்புகிறாரோ, அவருடைய மனமானது கற்பனையில் அந்த உருவங்களை உருவாக்கி அவரிடமே காட்டுகிறது. பேய்களைப் பார்த்ததாக சொல்பவர்களில் 95% மக்கள் உண்மையில் பார்த்தது என்னவென்றால்; அவர்களுடைய மனமானது உருவாக்கிய கற்பனை கதாபாத்திரங்களை மட்டுமே. உண்மையில் பேய் மற்றும் ஆவிகளை மனிதர்கள் பார்ப்பது என்பது மிக மிக அரிதான நிகழ்வாகும்.

அச்சத்தில் இருக்கும் ஒரு மனிதர் பேய்கள் நடமாடும் இடம் அல்லது ஆவிகள் இருக்கும் இடம் என்று எந்த இடத்தை நம்புகிறாரோ; அந்த இடத்திற்குச் செல்லும் பொழுது அவருடைய மனம், அவர் நம்பிக்கை கொண்டிருக்கும் உருவத்தை உருவாக்கி அவர் கண்களையே பார்ப்பதைப் போன்று கற்பனை செய்து கொள்கிறது.

உண்மையில் பேய் என்பதும், பேய் பிடித்தது என்பதும், பேயடித்தது என்பதும், பேயை ஓட்டுவது என்பது, மனிதர்களின் மனம் தொடர்புடைய நிகழ்வுகள் மட்டுமே. இதனால்தான் இந்தியப் பேய்களை சீனர்களும், சீனர்களின் பேய்களை அமெரிக்கர்களும், அமெரிக்கப் பேய்களை ரஷ்யர்களும், ரஷ்யப் பேய்களை சீனர்களும் பார்ப்பதில்லை. மனப் பதிவில் இல்லாத ஒரு உருவத்தை மனத்தினால் கற்பனை செய்ய முடியாது. அவ்வளவு ஏன் ஒரு ஊரில் இருப்பதாக அல்லது பார்த்ததாகக் கூறப்படும் பேயின் உருவத்தைக் கூட பக்கத்து ஊர்களில் உள்ளவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.

மனிதர்கள் பேய் என்று எந்த உருவத்தைக் கற்பனை செய்து கொள்கிறார்களோ அந்த உருவத்தை அவர்களின் மனமே கற்பனையில் உருவாக்கி அவர்களிடமே காட்டுகிறது. தன் மனம் சுயமாக உருவாக்கிய உருவத்தைப் பார்த்து மனிதன் பயத்தால் இறந்து போவதும் உண்டு.

மீண்டும் செல்கிறேன். மனிதர்கள் காணும் 95% பேய்கள் என்பவை வெறும் கற்பனைகள் மட்டுமே. பேய்களை யாராலும் சர்வ சாதாரணமாக கண்டுவிட முடியாது. அதைப்போல் பேய் என்று ஒன்று இல்லை என்று உறுதியாக நம்பும் ஒருவர் மரணம் வரையில் பேய்களைப் பார்ப்பதும் கிடையாது. இதற்குக் காரணம் அவர்களுடைய மனம் எந்த கற்பனையும் செய்வதில்லை, பேய் என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்குவதும் இல்லை. அதனால் அவர்கள் மரணம் வரையில் பேய்களைப் பார்ப்பதில்லை

பேய் பிசாசு பற்றிய பயத்தையும் கற்பனைகளையும் மறந்துவிட்டவர்கள்; இறுதிவரையில் பேய், பிசாசு, செய்வினை, போன்ற எதையுமே தங்கள் வாழ்க்கையில் சந்திக்க மாட்டார்கள்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field