மனிதனும் மனமும். மனதை வெறும் பதிவு செய்யும் இயந்திரம் என்று அலட்சியப்படுத்த முடியாது. ஐம்பொறிகளின் அனுபவங்களைப் பதிவு செய்வதையும் தண்டி, மனம் ஒரு வல்லமைபெற்ற அற்புதக் கருவியாகும். அது மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை, அதனால் அதனால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். அமைதியான மனம், நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதைப் போன்று அமைதியற்ற மனமானது நிம்மதியை அழித்து வாழ்க்கையையே சீரழிக்கக் கூடியது.
மனமானது உடல் ஆரோக்கியம் முதல், உடலின் பலம், இயக்கம், கல்வி, அறிவு, ஒழுக்கம், செல்வம், நிம்மதி, மகிழ்ச்சி வரையில் அனைத்தையும் நிர்ணயிக்கக் கூடியதாக இருக்கிறது. சீர்கெட்ட மனம் ஒரு யானையையும் பூனையாக்கிவிடும். ஆரோக்கியமான மனம் ஒரு பூனையைக் கூட யானை பலம் கொண்டதாக மாற்றிவிடும். ஒரு மனிதனுக்கு கல்வி, அறிவு, செல்வம், பெயர், புகழ், செல்வாக்கு என அனைத்தும் இருந்தாலும், அவன் மனம் மட்டும் சீர்கெட்டுவிட்டால், அவனைச் செல்லாக் காசாக்கிவிடும். இவை ஒன்றும் இல்லாதவனாக இருந்தாலும் கூட, மனம் மட்டும் செம்மையானால் இவை அனைத்தும் தக்க நேரத்தில் அவனுக்குக் கிடைக்க மனதால் உதவமுடியும்.
மனிதன் என்பவன் உடல், உயிர், மனம் மற்றும் சக்தியின் கலவையே. ஆதலால் மனம் வேறு மனிதன் வேறு என்பதும், மனதை அழிக்கிறேன் ஒழிக்கிறேன் என்பதெல்லாம் தவறான புரிதலைக் கொண்டவர்கள் கூறும் செய்திகளாகும். மனதை நாம் செய்ய வேண்டிய ஒரே விசயம், புரிந்து கொள்வது மட்டுமே.
மனம் மட்டும் முழு இயல்புடனும் ஆற்றலுடனும் இயங்கினால், மனிதன் அனைத்து ஆற்றல்களையும் இயல்பாகவே பெற்றுவிடுவான். வாழ்வதற்குத் தேவையான அறிவு, ஆற்றல் முதல் அட்டமாசித்திகள் வரையில் அனைத்தையும் அடையும் வல்லமை மனதிடம் உண்டு. மனதை தீய எண்ணங்கள் இன்றி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், வாழ்க்கை அழகானதாக இருக்கும்.