மனம்

மனிதனின் வளர்ச்சிக்கு உதவும் மனம் எனும் கருவி

மனிதனின் வளர்ச்சிக்கு உதவும் மனம் எனும் கருவி. விலங்குகளுக்குத் தேவை உண்டானால், இயற்கையான அதன் உடல் அமைப்பையும், உடலின் சிறப்புத் திறனையும் பயன்படுத்தி, அவை தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றன.

உதாரணத்திற்கு, ஒரு மரத்தின் மீது மாங்கனிகள் பழுத்திருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். ஒரு பறவைக்கு மாங்கனியை உண்ண வேண்டும் என்ற ஆசை உண்டானால், அது தனது சிறகுகளால் பறந்து அந்தக் கனியைக் கொத்தித் தின்ன வேண்டும். ஒரு குரங்கு அல்லது அணிலுக்கு அந்த பழத்தை உண்ண வேண்டும் என்ற ஆசை உண்டானால், அந்த மரத்தின் மீது ஏறி அந்த கனியைப் பறித்து உண்ண வேண்டும்.

ஒரு சிங்கத்துக்கு ஒரு மானை வேட்டையாடி உண்ண வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உண்டானால், அது தனது முழு பலத்தையும் பயன்படுத்தி அந்த மானைத் துரத்தி வேட்டையாடிக் கொன்று உண்ண வேண்டும். இவ்வாறு இந்த உலக இயக்கத்தில் ஒவ்வொரு உயிரினமும் தனது உடலையும், உடலில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களையும், அந்த உடலின் இயக்கங்களையும் பயன்படுத்தி மட்டுமே தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

மனிதர்களுக்கு மட்டும் இரண்டு வகையான தேர்வுகள் வழங்கப் பட்டிருக்கின்றன. மற்ற விலங்குகளைப் போன்று மனிதனும் தனது உடலைப் பயன்படுத்தி தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம், அல்லது தனது அறிவைப் பயன்படுத்தி அவற்றை அடைவதற்குத் தேவையான வழிமுறைகளையும் கருவிகளையும் உருவாக்கிக் கொள்ளலாம்.

ஏற்கனவே சொன்னதை போன்று சில விலங்குகளுக்கு, குறிப்பாக மனிதர்களுடன் நெருக்கமாக வாழும் விலங்குகளுக்கு மனம் சிறிய அளவில் வளர்ச்சி அடைந்து இருப்பதனால், அவற்றால் தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளத் தனது சிந்தனை ஆற்றலையும், கருவிகளையும் பயன்படுத்த முடிகிறது. காக்கைகளும் குரங்குகளும் மற்ற சில உயிரினங்களும் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயற்கையில் கிடைக்கும் சில கருவிகளைப் பயன்படுத்துவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

மனிதனுக்கு விலங்குகளை விடவும் மனம் அதிக ஆற்றலுடன் முழுமையாக இயங்குவதால்; மனிதனால் பல்வேறு கோணங்களில் சிந்தித்து அவனது தேவைகளுக்கு தக்கவாறு பல்வேறு வகையான வழிமுறைகளையும் கருவிகளையும் அவனால் உருவாக்கிக் கொள்ள முடிகிறது.

மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் மனமானது நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கும், அவனுக்குத் தேவையானவற்றை உருவாக்கிக் கொள்வதற்கும், அவனது வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்வதற்கும், அவனைத் தற்காத்துக் கொள்வதற்கும், உதவும் கருவியாகும்.

மனிதனின் மனம், உடலின் தேவைகள் முதல் தெய்வ நிலையை அடைவது வரையில், எல்லா நிலைகளிலும், எல்லா காலகட்டங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், அவனுக்கு உறுதுணையாக நின்று வழிகாட்டுகிறது. மனம் எந்த அளவுக்குப் பக்குவம் அடைந்திருக்கிறது என்பதுதான், மனிதன் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறான் என்பதைக் காட்டுகிறது.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X