மனித வாழ்க்கையும் கர்மாவும். கர்மாவை பல வகைகளாக பிரிக்கலாம், அவை காலம், நேரம், சூழ்நிலை, நோக்கம் போன்றவற்றால் மாறுபடுகின்றன. சில பொதுவான கர்மா வகைகள்.
நல்ல கர்மா
ஒருவர் செய்த செயல், அல்லது எண்ணிய எண்ணம், அந்த நபருக்கோ, மற்ற மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ, தாவரங்களுக்கோ, இந்த உலகுக்கோ ஏதாவது ஒரு வகையில் நன்மையானதாக அமைந்தால் அது நல்ல கர்மா.
தீய கர்மா
ஒருவர் செய்த செயல், அல்லது எண்ணிய எண்ணம், அந்த நபருக்கோ, மற்ற மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ, தாவரங்களுக்கோ, இந்த உலகுக்கோ ஏதாவது ஒரு வகையில் துன்பத்தையோ தீமையையோ விளைவித்தால் அது தீய கர்மா.
பழைய கர்மாக்கள்
பழைய கர்மாக்கள் என்பவை சிறுவயது முதலாக இன்று வரையில் உடலாலோ மனதாலோ செய்த செயல்கள். ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பதனால் அவை சென்ற பிறவிகளில் செய்தவையாகவும் இருக்கலாம். எத்தனை பிறவிகள் கடந்தாலும் நாம் செய்த பாவ புண்ணியங்கள் கண்டிப்பாக நம்மைப் பின் தொடர்ந்து வரும்.
மனதினால் உண்டாகும் கர்மாக்கள்
மனதினால் உண்டாகும் கர்மாக்கள் என்பவை ஒரு மனிதன் அவனது மனதாலும் எண்ணங்களாலும் பிற மனிதர்களுக்குத் தீங்கு நினைப்பது, பொறாமை, வெறுப்பு, பகைமை, கோபம், போன்ற குணாதிசயங்களை வளர்த்துக்கொள்வது. நேரடியாக மற்றவர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருந்தாலும், மனதளவில் உருவாகும் தீய எண்ணங்கள் கூட மனிதர்களுக்கு துன்பங்களை உருவாக்கக் கூடியவை.
வாழ்க்கையில் கர்மப் பலன்கள்
மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் அனுபவம் செய்யும் இன்ப துன்பங்களுக்கு கடவுள் காரணமில்லை, மற்றவர்களும் காரணமில்லை. மனிதர்களின் வாழ்க்கையில் உண்டாகும் இன்ப துன்பங்களுக்கு, அந்த தனி மனிதனும், அவன் செய்த நன்மை தீமைகளினால் உண்டான பலன்களும் தான் காரணம். என்றோ விதைத்ததை தான் இன்று அறுவடை செய்கிறார்கள்.
இதை எப்போதும் மனதில் நிறுத்திக் கொண்டு, வாழ்க்கையில் உண்டாகும் சுகத் துக்கங்களை சமநிலையோடு பார்க்க பழகிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் உண்டாகும் அனுபவங்களை, உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உருவாகிவிட்டால்; வாழ்க்கையில் துன்பங்கள் இருந்தாலும் வேதனை இருக்காது. துன்பங்களும் கஷ்டங்களும் தடம் தெரியாமல் விலகிச் செல்லும், வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.