மனித வாழ்க்கையில் வளர்ச்சியும் வெற்றியும் முழுமையானதாக இருக்க வேண்டும். ஒரு மனிதனின் உடலில் தலை, முண்டம், கை, கால், என்று ஒவ்வொரு உறுப்பும் வயதுக்கு ஏற்ப சீராக வளர்வதைப் போன்று மனித வாழ்க்கையின் வளர்ச்சியும் சரியாக மற்றும் சீராக இருத்தல் வேண்டும்.
ஒரு தனி மனிதனின் வளர்ச்சி என்பது தன் சுயம் (தனிநபர்), குடும்பம், நட்பு, சமுதாயம், மதம், நம்பிக்கை, உலகத்து உயிரினங்கள், இயற்கை, என அனைத்து நிலையிலும் வளர்வதாக இருக்க வேண்டும்.
தனி மனிதனின் சுய வளர்ச்சி என்பது ஆரோக்கியம், அறிவு, தெளிவு, ஞானம், ஆன்மீகம், பொருளாதாரம், என அனைத்து நிலையிலும் சமமான புரிதலும் வளர்ச்சியும் கொண்டதாக இருக்க வேண்டும்.
இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் மட்டுமே தேர்ச்சி பெறுவதும், வளர்ச்சி அடைவதும், வெற்றி பெறுவதும், தான் வளர்ச்சி என்று பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் ஒரு பகுதிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது அல்லது ஏதாவது ஒன்றில் மட்டும் மேன்மை அடைய நினைப்பது, மனித உடலில் ஏதாவது ஒரு உறுப்பை மட்டும் இயல்புக்கு மாறாக வளர்த்துக்கொள்ள முயல்வதற்குச் சமமாகும்.
மனிதனின் கைகளில் இருக்கும் பத்து விரல்களில் ஒரு விரல் மட்டும் எனக்கு அதிகமாகப் பிடித்திருக்கிறது அதனால் அந்த ஒரு விரல் மட்டும் அதிக நீளமாக வளரட்டும் என்று எண்ணுவதைப் போன்றது மனித வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் மட்டும் முக்கியத்துவம் செலுத்துவது.
தலை முதல் கால் வரையில் சீராக வளர்வதைப் போன்று மனித வாழ்க்கையின் அத்தனை நிலைகளிலும் சீராக வளர முயற்சி செய்ய வேண்டும்.