வாழ்க்கை

மனித வாழ்க்கை பரமபதம் விளையாட்டுக்கு ஒப்பானது

a close up of a board game with dices

மனித வாழ்க்கை பரமபத விளையாட்டுக்கு ஒப்பானது. அதில் ஏற்றம், இறக்கம், இரண்டுமே சகஜமானது. கீழே இருப்பவர்கள் முன்னேறி செல்வதும், மேலே உள்ளவர்கள் கீழே இறங்குவதும், இங்கு இயல்பாக நடப்பவை. அவை இந்த விளையாட்டின் ஒரு அங்கம். ஏற்ற இறக்கத்திற்கு அஞ்சி நிற்பவர்கள் ஆட்டத்தைத் தொடங்குவதில்லை. வாழ்க்கையில் வெற்றி தோல்விகளுக்கு அஞ்சி நிற்பவர்கள் வாழ்க்கையை வாழ்வதில்லை.

பரமபத ஆட்டத்தில் நாம் முன்னேறிச் செல்ல நமக்கு பல ஏணிகள் உதவியாக இருக்கும், அந்த ஏணிகளை நோக்கி நமது காயை நகர்த்திச் செல்வது நமது கடமை. அதே நேரத்தில் நம்மை கீழே இறக்கி விட காத்துக் கொண்டிருக்கும் பாம்புகளிடமிருந்து எச்சரிக்கையாக நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும்.

வாழ்க்கையில் நமக்கு உதவி செய்து, வழிகாட்டி, வெற்றிப்படிகளில் ஏற்றிவிட பலர் உதவுவார்கள். அதே சந்தர்ப்பத்தில் ஏணி என்று நாம் எண்ணும் சிலர், பாம்பாகக் கொத்தி கீழே தள்ளிவிடுவார்கள். பாம்பைக் கண்டு அஞ்சிக் கொண்டிருந்தால் எந்த காலத்திலும் ஏணியில் ஏறிப் பார்க்க தைரியம் உண்டாகாது. ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து கொண்டிருந்தாலும் கூட, எங்கும் நின்றுவிடாமல் பயணித்துக் கொண்டே இருந்தால், நாம் ஏறி மேலே செல்லக்கூடிய ஏணியை அடையும் வாய்ப்பு நிச்சயம் உண்டாகும்.

பெரும்பாலும் தூரத்தில் நிற்கும் பாம்புகளைக் கண்டு அஞ்சி பலர் பாதையிலேயே நின்றுவிடுகிறார்கள். சிலர் பயணத்தை நிறுத்தி கொள்கிறார்கள். ஒரு சிலர் பாம்பு என்ன செய்யுமோ என்ற அச்சத்தில் ஏணியை (வாய்ப்புகளை) கவனிப்பதே இல்லை. பலர் பயணத்தைத் தொடங்குவதே இல்லை. கண்முன்னே நிற்கும் பாம்புகளைக் கண்டு, அதாவது துன்பம், துயரம், தடை, கடன், தோல்வி, தீய மனிதர்கள், துரோகம், நோய், மனவேதனை, உடல் உழைப்பு, போன்ற வற்றைக் கண்டு அஞ்சி நிற்கும் வரையில் நின்று கொண்டே இருக்க வேண்டியதுதான்.

பரமபதம் ஆட்டத்தில், பாம்புகள் இல்லாமல் ஏணிகள் மட்டுமே இருந்தால், அந்த ஆட்டம் சுலபமாக இருக்கும், வெற்றியை மட்டுமே தரும். ஆனால் அந்த ஆட்டத்தில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது. அந்த ஆட்டத்தை ஆடுவதால் நமக்கு எந்த அனுபவமும், புரிதலும், துணிச்சலும், உண்டாகாது. அவ்வளவு ஏன், மீண்டும் அந்த ஆட்டத்தை ஆட வேண்டும் என்ற எண்ணம் கூட உருவாகாது. மிகவும் எளிமையாக, வெற்றியை மட்டுமே தரும், எதிர்ப்பும் போட்டியும் இல்லாத எந்த விளையாட்டும் சுவாரஸ்யமாக இருக்காது.

துணிந்து, முயன்று, தன்னால் இயன்றதைச் செய்பவன் தான், சவாலையும் துன்பத்தையும் எளிதாக எதிர்கொள்வான். அதே சூழ்நிலையில் வாழ்க்கையில் இன்பங்களும் மகிழ்ச்சியும் அவனையே வந்தடைகின்றன.

பாம்புகளிடம் எச்சரிக்கையாக இருக்கும் அதேவேளையில் தனது இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டே இருப்பவன். வெற்றி தோல்விகளைப் பற்றிச் சிந்திக்காமல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருப்பவன், நிச்சயமாக ஒருநாள் அவன் தனது இலக்கை அடைந்தே தீருவான். வாழ்க்கையின் வெற்றி பயணத்தால் தீர்மானிக்கப்படுகின்றன, சாக்கடையாகத் தேங்கிவிடாமல் பயணித்துக் கொண்டே இருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X