மனித உடலின் இயக்கம், மற்றும் நோயறிதல்
நோய்கள்

மனித உடலின் இயக்கம், மற்றும் நோயறிதல்

மனித உடலின் இயக்கம், மற்றும் நோயறிதல். மனித உடல், தலை முடி முதல் கால் பாதம் வரையில் முழுமையான ஒற்றை இயக்கமாகத் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. உடல் என்ற முழுமை தலை முடி முதலாக கால் பாதங்கள் வரையில், மொத்த வெளி மற்றும் உள் உறுப்புகளையும் உள்ளடக்கியது. மனித உடலில், தலையில் உள்ள உறுப்புகளுக்குத் தனி இயக்கம், உடலின் உள்ளே உள்ள உறுப்புகளுக்குத் தனி இயக்கம், உடலின் வெளியே உள்ள உறுப்புகளுக்குத் தனி இயக்கம் என்றெல்லாம் கிடையாது.

முழுமையான ஒற்றை இயக்கமாக இயங்கிக்கொண்டிருக்கும் உடலில், ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கும், ஆராயும், தனித்தனியாகப் பிரித்து சிகிச்சை செய்யும் ஆங்கில மருத்துவத்தின் நடைமுறை, மனித உடலின் இயக்கத்தை அது இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆங்கில மருத்துவர்கள் மட்டுமின்றி பாரம்பரிய இயற்கை மருத்துவர்களில் பலரும் உடலை முழுமையாக பார்க்காமல், பிரித்துப் புரிந்துகொள்ள முயல்வது வேதனைக்குரிய விசயம்.

உடலின் இயக்கத்தைத் தனித்தனியாகப் பிரித்து ஆராய்வதாலும், புரிந்துகொள்வதாலும், சிகிச்சை அளிப்பதாலும் தான், இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலும் நோய்கள் முழுமையாக குணமாவதில்லை. தலை முடி முதல் கால் பாதம் வரையில் முழுமையான ஒற்றை இயக்கம் என்பதைப் புரிந்து கொண்டால்தான், ஒரு உடலில் உண்டாகியிருக்கும் தொந்தரவுக்கு உண்மையான மூலகாரணம் என்ன என்பது விளங்கும். ஆங்கிலத்தில் சிம்ப்டம் (symptom) என்று குறிப்பிடப்படும் நோயின் அறிகுறிகளைத்தான், இன்றைய பெரும்பான்மையான மருத்துவர்கள் நோய் என்று எண்ணுகிறார்கள்.

தோலிலும், உடலின் வெளிப்புறத்திலும், முகத்திலும் உண்டாகும் தொந்தரவுகள் மற்றும் குறைபாடுகள் உடலின் முக்கியமான பகுதிகளில் உண்டாகியிருக்கும் பலவீனத்தையும், நோய்க் கூறுகளையும், சேர்ந்திருக்கும் கழிவுகளையும் அடையாளம் காட்டக் கூடிய அறிகுறிகள் மட்டுமே. உடலில் எந்த பாகத்தில் அல்லது எந்த உறுப்பில் தொந்தரவு உண்டானாலும், அந்த தொந்தரவு பெரும்பாலும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்புடையதாகத் தான் இருக்கும். பாதிக்கப்பட்ட மற்ற பாகங்களையும் கண்டறிவதுதான், உண்மையான முழுமையான நோயறிதலாக இருக்கும்.

உடல் என்பது ஒரு முழுமையான இயக்கம் என்பதைக் கருத்தில் கொண்டு நோய்க் கண்டவரை ஆராய வேண்டும். உடலின் இயக்கத்தில் உண்டாகியிருக்கும் குறை நிறைகளையும், உடல் மற்றும் மனதில் உண்டாகியிருக்கும் மாற்றங்களையும், தற்போது உடல் வெளிக்காட்டி இருக்கும் அறிகுறிகளையும் ஒப்பு நோக்கி உண்மையான பாதிப்பையும் அது உண்டாகியிருக்கும் உடலின் பகுதியையும் கண்டறிய வேண்டும்.

Leave feedback about this

  • Rating
X